வடசென்னையில் குப்பை அள்ளும் பணி தனியார் மயமாகிறது- தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு
- சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் அந்த பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சென்னை மாநகராட்சியின் முடிவை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னை:
வடசென்னையில் உள்ள திரு.வி.க. நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி குடிமை அமைப்பால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த 2 மண்டலங்களிலும் குப்பைகளை அகற்றுவதை தனியார் மயமாக்குவது குறித்து விவாதிக்க கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் அந்த பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் குப்பை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். குப்பை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் தங்களின் வேலை பறிபோகும் ஆபத்து இருப்பதாக அவர்கள் கூறினார்கள். ராயபுரம் மண்டலத்தில் குப்பை அகற்றும் தொழிலாளர்கள் 864 பேரும், திரு.வி.க.நகரில் 1,029 பேரும் உள்ளனர். இவர்களின் மூலம் சென்னை மாநகராட்சி தற்போது குப்பைகளை அகற்றி வருகிறது.
குப்பைகள் அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் இவர்கள் அனைவருமே பாதிக்கப்படுவார்கள்.
இதனாலேயே இதற்கு தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சென்னை மாநகராட்சியின் முடிவை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் அடையாளமாக வடசென்னை பகுதி சி.ஐ.டி.யூ., சென்னை மாநகராட்சி தொழிலாளர் அமைப்பு சார்பில் திரு.வி.க.நகர் ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.