தமிழ்நாடு

கோவில்பட்டி அருகே தடுப்பு சுவரில் மோதி, நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த லாரி

Published On 2024-02-22 04:31 GMT   |   Update On 2024-02-22 04:31 GMT
  • தீ விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  • தீ விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி:

தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார்.

இவருக்கு சொந்தமான டாரஸ் லாரி ஒன்று நேற்று நள்ளிரவில் தூத்துக்குடியில் இருந்து சிவகாசியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்றது. லாரியை எட்டயபுரம் அருகே உள்ள மஞ்சுநாயக்கன்பட்டியை சேர்ந்த டிரைவர் கற்பகராஜ் என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த கிளீனர் முருகேசன் என்பவர் இருந்தார்.

லாரி இன்று அதிகாலையில் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியில் வந்த போது திடீரென நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் அதிவேகமாக மோதியது.

இதில் லாரியின் முன்பக்க டயர் ஒன்று ஸ்டிரியங் உடன் துண்டானது மட்டுமின்றி, மோதிய வேகத்தில் டீசல் டேங்க்கும் உடைந்தது. இதனால் மளமளவென தீ பற்றி எரிந்தது. இதனால் சுதாரித்து கொண்ட டிரைவர் கற்பகராஜா மற்றும் கிளீனர் முருகேசன் ஆகியோர் லாரியின் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

நடுரோட்டில் லாரி தீப்பிடித்து எரிந்து கொண்டு இருப்பதை பார்த்த அருகில் இருந்த அப்பகுதியினர் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர், நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். எனினும் லாரியில் நிலக்கரி இருந்ததால் லாரி மட்டுமின்றி அதில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நிலக்கரியும் எரிந்து சாம்பலானது.

இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News