தமிழ்நாடு

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள குரங்கு அம்மை நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டபோது எடுத்தப்படம்.

தமிழகத்தில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பாதுகாப்பு வசதி சிறப்பாக உள்ளது- மா.சுப்பிரமணியன்

Published On 2024-08-30 05:34 GMT   |   Update On 2024-08-30 05:40 GMT
  • குரங்கம்மை தொடர்பாக விமான பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விமான நிலையங்களில் விழிப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட உள்ளது.
  • அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை.

கோவை:

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.

விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஐரோப்பியாவில் கண்டறியப்பட்ட குரங்கம்மையானது தற்போது உலகம் முழுவதும் 121 நாடுகளில் பரவியுள்ளது. இதையடுத்து உலகில் குரங்கம்மை என்ற நோய் பரவி வருவதால் அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார இயக்குனர் கேட்டுக்கொண்டார்.

அதன் அடிப்படையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் குரங்கம்மை தொடர்பான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மேலும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் தனி வார்டும் தொடங்கப்பட்டுள்ளது.

குரங்கம்மை பாதிப்பு யாருக்காவது கண்டறியப்பட்டால் அவர்கள் இங்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காய்ச்சல் பரிசோதனையும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக காய்ச்சல் கண்டறியும் கருவியும் வைக்கப்பட்டுள்ளது.

குரங்கம்மை தொடர்பாக விமான பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விமான நிலையங்களில் விழிப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட உள்ளது.

இதுமட்டுமின்றி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 அரசு ஆஸ்பத்திரிகளிலும் தலா 10 படுக்கை வசதிகளுடன் பிரத்யேக வார்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் இந்த பாதிப்பு கண்டறியப்படவில்லை.

தமிழகத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் முதல்வன் மருந்தகம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.

அதன்படி வருகிற பொங்கல் பண்டிகை முதல் தமிழகத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் 1000 முதல்வன் மருந்தகம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும். இதன் மூலம் மக்கள் பயன் அடைவார்கள்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பாதுகாப்பு வசதி சிறப்பாக உள்ளது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News