தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு சார்பில் விரைவில் 'Home of Chess Academy' தொடங்கப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2024-12-17 14:44 GMT   |   Update On 2024-12-17 15:29 GMT
  • இந்தியாவின் 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
  • தமிழ்நாடு அரசு சார்பில் விரைவில் Home of Chess Academy தொடங்கப்படும்.

உலக சாம்பியன் குகேஷ்க்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் கொடுத்து குகேஷ் வாழ்த்து பெற்றார். பின்னர் மரத்தால் செய்யப்பட்ட செஸ் போர்ட்டை முதலமைச்சருக்கு குகேஷ் பரிசாக வழங்கினார்.

பின்னர் உலக செஸ் சாம்பியன் குகேஷிற்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதனையடுத்து உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு புகழ்மாலை சூட்டுகிறேன். நம்ம சென்னை பையன் குகேஷ். செஸ் என்பது வெறும் விளையாட்டு அல்ல. அது அறிவு சார்ந்த விளையாட்டு. திறமை, விடாமுயற்சி, இலக்கை நோக்கிய பயணத்தால் 11 ஆண்டுகளில் இந்த உலக சாதனையை அவர் படைத்துள்ளார். ஒரு குகேஷின் வெற்றி, லட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்க வேண்டும்.

விஸ்வநாதன் ஆனந்த் முதல்முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றபோது அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தினார். இந்தியாவின் 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு அரசு சார்பில் விரைவில் Home of Chess Academy தொடங்கப்படும்.

தமிழக விளையாட்டு வீரர்களை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. பாரீஸ் பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு 5 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

பொறுமையாக சரியான நகர்வுகள் மூலம் ஆற்றல் குறைவான சிப்பாயைக் கூட சக்திவாய்ந்த ராணியாக மாற்றலாம்.. அதே போல் பொறுமையும், விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றிதான். வெற்றி தோல்வி முக்கியம் அல்ல, பங்கேற்புதான் முக்கியம், பங்கேற்பதே பெரிய வெற்றிதான்

விளையாட்டு துறையை சிறப்பாக நடத்தி வரும் உதயநிதிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News