தமிழ்நாடு

மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2023-09-14 10:18 IST   |   Update On 2023-09-14 10:18:00 IST
  • நீலகிரி மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு கோவை மாவட்டம் வால்பாறைக்கு வந்தார்.
  • சிறுகுன்றா வனத்துறை விருந்தினர் மாளிகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓய்வெடுத்தார்.

கோவை:

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கோவை மாவட்டம் வால்பாறையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

நீலகிரி மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு கோவை மாவட்டம் வால்பாறைக்கு வந்தார். அங்குள்ள சிறுகுன்றா வனத்துறை விருந்தினர் மாளிகையில் இரவு அவர் ஓய்வெடுத்தார்.

இன்று காலை 6 மணிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடைபயணமாக சின்கோனா மலைப்பகுதிக்கு சென்றார். அங்கு வாழும் மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது பொதுமக்கள் அடிப்படை வசதிகள் உள்ளிடட பல்வேறு குறைகளை தெரிவித்தனர். அந்த குறைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் தீர்த்து வைப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தார்.

பின்னர் அவர் வால்பாறை நகராட்சி சமுதாய கூடத்தில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கான ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் பின் பேறுகால தாய்-சேய் மனநலம் பேணுவதற்கான பயிற்சியை தொடங்கி வைத்தார். பயிற்சி கையேட்டையும் அவர் வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரூ.50 லட்சம் செலவில் பெரியபோது மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்ட வட்டார பொது சுகாதார கட்டிடம், அரிசி பாளையத்தில் ரூ.50 லட்டசம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது சுகாதார கட்டிடம், ரூ.38 லட்சத்தில் கட்டப்பட்ட அரசம்பாளையம் துணை சுகாதார நிலையம் ஆகியற்றை மக்களின் பயன்பாட்டிக்காக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகள் முடிந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று இரவு கோவையில் இருந்து சென்னை திரும்புகிறார்.

Tags:    

Similar News