2 தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி
- பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய இளைஞர்களின் வாக்கு வங்கியை உருவாக்குவதற்கு வாய்ப்பில்லை.
- தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க.வினர் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவளிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.
இதன்படி சிதம்பரத்தில் 6-வது முறையாக அக்கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்ட தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிதம்பரம், விழுப்புரம் 2 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறோம். இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்று இந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவோம். தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
சிதம்பரம் தொகுதியில் 6-வது முறையாக போட்டியிடுகிறேன். இந்த முறையும் பாராளுமன்றத்திற்கு மக்கள் அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு களம் காண்கிறேன்.
அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக ராகுல் காந்தி மேற்கொண்ட 2 கட்ட இந்திய ஒற்றுமை பயணம் வெற்றி பெற்றுள்ளது. இந்த நாட்டை பாசிச சக்திகளிடமிருந்து காப்பாற்றுவதற்கான தேர்தலாக இது அமைந்துள்ளது. 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் கண்கூடாக எந்த வளர்ச்சியையும் காணவில்லை.
மக்களை சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிளவுபடுத்தி அதனை நிலைப்படுத்த நினைக்கிறார்கள். அகில இந்திய அளவில் ஒரு அமைதிப் புரட்சி நிகழ இருக்கிறது. இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு அது பிரதானமான தேவையாக இல்லை.
பா.ஜ.க.வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை மக்களின் வேட்கையாக இருக்கிறது. தேர்தல் யுத்தம் நடப்பது காங்கிரசுக்கும், பா.ஜ.க.விற்கும் அல்ல. மக்களுக்கும், சங்பரிவாருக்கும் நடக்கும் யுத்தம் தான் இந்த தேர்தல் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகள் அமையும்.
இ.வி.எம். மிஷினை தில்லுமுல்லு செய்து வெற்றி பெறலாம் என பா.ஜ.க. நினைக்கிறது. அதற்கு ஒரே தீர்வு 100 விழுக்காடு மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டில் எப்படியாவது பாரதிய ஜனதா 2-வது பெரிய சக்தியாக வந்துவிட வேண்டும் என்று பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் காலூன்றி இங்கும் வட இந்திய மாநிலங்களில் இருப்பதைப் போன்ற வெறுப்பு அரசியலை விதைத்து மக்களை பிளவுபடுத்துவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் தி.மு.க., அ.தி.மு.க. வேறு அணிகளில் தேர்தலை சந்தித்தாலும் சமூக நீதி என்று ஒரு புள்ளியில் அணி திரண்டு இருக்கிறோம்.
இந்த மாபெரும் கருத்தியல் யுத்தத்தில் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். அகில இந்திய அளவில் நாட்டையும் அரசமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற வேண்டும்.
இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அவரவர் சின்னங்களில் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன். 2 தொகுதிகளில் போட்டியிட்டால் 40 தொகுதிகளும் சிறுத்தைகளின் தொகுதிகள் தான் என்ற அடிப்படையில் களப்பணியாற்றுவோம்.
பா.ம.க. எப்பொழுதும் சாதிய மதவாத அரசியலில் திளைத்துக் கிடக்கிறார்கள், ஓ.பி.சி. , எம்.பி.சி. மக்களுக்கு எதிரான நிலைப்பாடாகவே பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருப்பதை பார்க்கிறேன்.
ஓ.பி.சி., எம்.பி.சி. மக்களை பாட்டாளி மக்கள் கட்சி கைவிட்டாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம். நாளையில் இருந்து மனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால் இன்னும் பா.ஜ.க., அ.தி. மு.க. ஒரு கூட்டணியாக இன்னும் உருவாகவில்லை. தி.மு.க. ஏற்கனவே கூட்டணியை கட்டமைத்து தேர்தலுக்கு தயாராக உள்ளது.
பா.ஜ.க. கூட்டணி தன்னோடு சேர்ந்த கட்சிகளில் ஊடுருவி அவர்களை நீர்த்துப்போக செய்வது அனைவரும் அறிவார்கள். இந்த நிலையில் பா.ஜ.க. வுடன் பா.ம.க. கூட்டணி சேர்ந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கலைஞர், ஜெயலலிதா போன்ற கவர்ச்சிமிகு தலைவர்கள் இல்லை என்ற நம்பிக்கையில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்று பகிரங்க முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு இடம் கொடுக்க வாய்ப்பில்லை.
பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய இளைஞர்களின் வாக்கு வங்கியை உருவாக்குவதற்கு வாய்ப்பில்லை. மோடி, அமித்ஷாவுடன் கருத்தியல் ரீதியாக முரண் ஏற்பட்டு கூட்டணியில் இருந்து பிரிந்து அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கவில்லை, உள்ளூர் தலைவர் அண்ணாமலையுடன் கருத்து முரண் ஏற்பட்டு தான் தேர்தலை தனித்தனியாக சந்திக்கின்றனர்.
சிறுபான்மையினர் வாக்குகளை ஒட்டு மொத்தமாக தி.மு.க. அணி பெற்றுவிடாமல் தடுப்பதற்கு அ.தி.மு.க. பிரிந்து தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க.வினர் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவளிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதனை உணர்ந்து சிறுபான்மையின மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.