தமிழ்நாடு

சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் பூந்தமல்லி பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

Published On 2022-11-22 14:20 IST   |   Update On 2022-11-22 14:20:00 IST
  • பொதுமக்கள் மேற்படி பணியினை விரைவில் முடிக்க இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது ஆலோசனைகளை அனுப்பலாம்.

சென்னை:

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை பூந்தமல்லி டிரங்க் சாலையில் போரூர் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை நடைபெறும் சென்னை மெட்ரோ ரெயில் திட்டபணிக்காக (கட்டம்2) (4 வதுவழித்தடம்) தற்போதுள்ள போக்கு வரத்து முறையில் பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் பின்வரும் தற்காலிக போக்குவரத்து மாற்றம் இன்று (22-ந்தேதி) முதல் 11.02.2023 வரையில் பகல் மற்றும் இரவு முழுவதும் நடைமுறை படுத்தப்பட உள்ளது.

சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதூர் பக்கம் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்களில், பூந்தமல்லிக்கு முன்பாக, சென்னை வெளிவட்ட சாலை வழியாக இடதுபுறம் திரும்பி மீஞ்சூர் நோக்கி செல்லும் வாகனங்கள், வழக்கமாக சென்னை வெளிவட்ட சாலையின் சர்வீஸ் ரோட்டில் இடதுபுறம் திரும்பி செல்கின்றன.

அவ்வாறான வாகனங்கள் மட்டும் வழக்கமாகஇடது புறம் திரும்பும் இடத்தில் திரும்பாமல், மெயின் ரோட்டிலேயே அங்கிருந்து சுமார் 200 மீட்டர்தாண்டிச் சென்று இரண்டு வெளிவட்ட சாலை பாலங்களுக்கு இடையில் உள்ள சாலை வழியாக இடதுபுறமாக செல்ல வேண்டும்.

சென்னை வெளிவட்ட சாலையில் வண்டலூர் பக்கமிருந்து வரும் அனைத்து வாகனங்களும் தற்போது பூந்தமல்லி நசரத்பேட்டை அருகில் இடதுபுறம் திரும்பி, சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையை அடைந்து பூந்தமல்லி நோக்கி செல்கின்றன.

அந்த வாகனங்கள், பூந்தமல்லி நசரத்பேட்டை அருகில் சென்னை வெளி வட்ட சாலை பாலத்தில் இருந்து இடது புறம் திரும்பாமல், சென்னை வெளிவட்ட சாலையிலேயே நேராக சென்று கோலப் பஞ்சேரி சுங்கசாவடிக்கு முன்பு வலது புற 'யு'வடிவில் திரும்பி, சென்னை வெளி வட்ட சாலையிலேயே பூந்தமல்லி பைபாஸ் பகுதி வரை வந்து, பின்னர் பெங்களூர் சென்னை நெடுஞ்சாலையினை அடைந்து தாங்கள் சென்று சேர வேண்டிய இடங்களுக்கு சென்றடையலாம்.

பொதுமக்கள் மேற்படி பணியினை விரைவில் முடிக்க இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது ஆலோசனைகளை அனுப்பலாம்.

அம்பத்தூர் போக்கு வரத்துகாவல் உதவி ஆணையாளர் கைப்பேசி எண் 9444212244 -ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

காவல் ஆய்வாளர், T12 பூந்தமல்லி போக்குவரத்து அலைபேசி எண் 9600009159-ஐ தொடர்பு கொள்ளலாம்.

ஆவடி கட்டுப்பாட்டு அறை எண்: 7305715666-ஐ தொடர்பு கொள்ளலாம்.

Similar News