நீச்சல் பயிற்சி பெற 8 வயது நிரம்பி இருக்க வேண்டும்- சென்னை மாநகராட்சி புதிய கட்டுபாடுகள் விதிப்பு
- கோடைகாலம் தொடக்கம் மற்றும் பள்ளி விடுமுறை என்பதால் பல்வேறு இடங்களில் நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நீச்சல் குளத்தில் சிறுவன் மூழ்கி இறந்ததையடுத்து நீச்சல் பயிற்சி பெற வயது வரம்பு உள்ளிட்ட 8 புதிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி கொண்டு வந்துள்ளது.
சென்னை:
சென்னை பெரியமேட்டில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் நீச்சல் குளம் உள்ளது. கடந்த வாரம் இங்கு நீச்சல் பழக வந்த கொசப்பேட்டையை சேர்ந்த 7 வயது சிறுவன் தேஜா குப்தா தண்ணீரில் மூழ்கி பலியானான்.
இதையடுத்து நீச்சல் குளத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் நீச்சல் குளத்திற்கு சீல் வைத்து தற்காலிகமாக மூடப்பட்டது.
கோடைகாலம் தொடக்கம் மற்றும் பள்ளி விடுமுறை என்பதால் பல்வேறு இடங்களில் நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து நீச்சல் பயிற்சி பெற 8 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்று புதிய கட்டுப்பாட்டை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
இதேபோல் நீச்சல் பயிற்சிக்கு பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் கடிதம், உடல் நலம் குறித்த டாக்டரின் சான்றிதழ் முறையான பயிற்சியாளர், பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை கட்டுப்பாடு உள்ளிட்ட 8 விதிமுறைகள் மாநகராட்சி கொண்டு வந்து உள்ளது.
நீச்சல் குளத்தில் சிறுவன் மூழ்கி இறந்ததையடுத்து நீச்சல் பயிற்சி பெற வயது வரம்பு உள்ளிட்ட 8 புதிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி கொண்டு வந்துள்ளது.
மீண்டும் இது போன்ற விபத்துகள் நடை பெறாமல் இருக்க உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நீச்சல் குளங்களுக்கான ஒப்பந்ததாரர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தண்ணீரில் பி.எச்.அளவை சரிபார்த்தல், டைல்ஸ், பாதுகாப்பு உபகரணங்கள், பயிற்சியாளர்கள், கண்காணிப்பு கேமிரா உள்ளிட்டவற்றை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்வார்கள்.
மெரினா நீச்சல் குளம் திறக்கப்பட்டு பாதுகாப்பு குறித்து கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
திருவொற்றியூர் சண்முகனார் பூங்காவில் உள்ள நீச்சல் குளம் பராமரிப்பில் உள்ளது. மைலேடி நீச்சல் குளத்தில் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும். ஒப்பந்ததாரரும் மாற்றப்பட உள்ளார். கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்கள் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.