தமிழ்நாடு

அவசரநிலை பற்றிய கருத்து.. பாலகிருஷ்ணனுக்கு கண்டனம் தெரிவித்த தி.மு.க. நாளேடு

Published On 2025-01-05 02:54 GMT   |   Update On 2025-01-05 06:30 GMT
  • முதல்வரை எப்போதும் சீண்டி பார்க்க வேண்டும் என்ற நெருக்கடி கே.பாலகிருஷ்ணனுக்கு இருக்கலாம்.
  • பல்லாண்டு அனுபவம் கொண்ட தோழர் உணராமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 24-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தி.மு.க. அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், நேற்றுவரை ஆட்சியை பாராட்டியவர் பாலகிருஷ்ணன். அவருக்கு என்ன நெருடல் என புரியவில்லை. அவர் எந்த கண்ணோட்டத்தில் பேசுகிறார் என்பதும் தெரியவில்லை. குற்றம்சாட்ட வேண்டுமென்ற நோக்கில் குறைசொன்னால் அதற்கெல்லாம் பதில் தர முடியாது.

பாலகிருஷ்ணனின் கோரிக்கைகள் என்னவென்று அறிந்து நிவர்த்தி செய்வோம். திமுக ஆட்சியில் எவ்வளவோ போராட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின்போது மக்கள் பாதிக்கக்கூடாது என்பதே அரசின் நோக்கம். அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்தது கடந்த ஆட்சிக்காலம். போராட்டம் நடத்துபவர்களை ரிமாண்ட் செய்யும் சூழ்நிலை கூட ஏற்படுவதில்லை என்று கூறினார்.

இந்த நிலையில், கே.பாலகிருஷ்ணன் பேச்சு தோழமைக்கான இலக்கணம் அல்ல என்று தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் கூறியருப்பதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கியிருக்கிறார் கே.பாலகிருஷ்ணன். போராட்டங்களை நடத்திவிட்டு அனுமதி அளிக்கவில்லை என கூறுவது அரசியல் அறமல்ல. பாலகிருஷ்ணனின் பேச்சு கூட்டணி அறமல்ல, மனசாட்சிக்கு அறமும் இல்ல.

அவசர நிலை என்றால் என்ன என்றே தெரியாத நிலையிலா இருக்கிறார் பாலகிருஷ்ணன். பின்விளைவுகளை பற்றி கவலைபடாமல் பேசுவது தோழமைக்கான இலக்கணம் அல்ல. குழப்பம் ஏற்படுத்துபவர்களுக்கு வக்கீலாக மாற வேண்டியது ஏன்? பாலகிருஷ்ணன் 6 நாட்களுக்கு முன் அவர் எழுதிய அறிக்கையை படிக்க வேண்டும்.

முதல்வரை எப்போதும் தொடர்பு கொள்ளும் நிலையில் இருக்கிறார் கே.பாலகிருஷ்ணன். எதற்காக வீதியில் நின்று கொண்டு இப்படி கேட்க வேண்டும். முதல்வரை எப்போதும் சீண்டி பார்க்க வேண்டும் என்ற நெருக்கடி கே.பாலகிருஷ்ணனுக்கு இருக்கலாம்.

விழுப்புரம் மாநாட்டில் பாலகிருஷ்ணன் வெளிச்ச விதைகளை விதைக்கவில்லை. பல்லாண்டு அனுபவம் கொண்ட தோழர் உணராமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News