அ.தி.மு.க.வை கைப்பற்ற சசிகலா, டி.டி.வி.யுடன் ஓ.பி.எஸ். இணைய வேண்டும்- ஆதரவாளர்கள் பரபரப்பு போஸ்டர்
- அ.தி.மு.க.வை மீட்டெடுக்க சசிகலா, தினகரன் ஆகியோருடன் இணைந்து ஓ.பி.எஸ். பணியாற்ற வேண்டும் என்று வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
- ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டி வரும் நிலையில் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம்:
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினை தலைதூக்கியுள்ள நிலையில் கட்சியில் பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதன் முடிவுகளை வெளியிட சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த தீர்ப்பை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வரும் நிலையில் அவரது சொந்த ஊரான பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அ.தி.மு.க.வை மீட்டெடுக்க சசிகலா, தினகரன் ஆகியோருடன் இணைந்து ஓ.பி.எஸ். பணியாற்ற வேண்டும் என்று வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. ஒற்றுமையே வலிமை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. தொண்டர்களே வாருங்கள் ஒன்றிணைவோம் என குறிப்பிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளன.
ஏற்கனவே அ.தி.மு.க.வின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமியே காரணம் என திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் சசிகலா, தினகரனுடன் இணைய வலியுறுத்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கட்சியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரியகுளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், அ.ம.மு.க. நிர்வாகிகளும் ஒன்றாக இணைந்து கலந்து கொண்டனர். அப்போது அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கொடியை ஏந்தி தி.மு.க. நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
அப்போது பேசிய ஓ.பி.எஸ். ஆதரவு மாவட்ட செயலாளரான சையது கான், அ.தி.மு.க.வை வழி நடத்தும் முழு தகுதியும் ஓ.பன்னீர்செல்வத்துக்கே உள்ளது. இதனை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிந்ததால்தான் அவருக்கு 2 முறை முதல்-அமைச்சர் பதவி வழங்கினார். ஆனால் குறுக்கு வழியில் முதல்-அமைச்சர் பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமி தற்போது கட்சியையே அபகரிக்க பார்க்கிறார்.
இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே. வேறு யாரையும் அந்த இடத்துக்கு கட்சியினர் விரும்ப மாட்டார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி குறுக்கு வழியில் தனக்கு ஆதரவான சிலரை வைத்துக் கொண்டு பொதுச் செயலாளர் பதவியை அடைய துடிக்கிறார்.
தொண்டர்களால் மட்டுமே பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும். விரைவில் சசிகலா மற்றும் தினகரனை கட்சியின் நலன் கருதி ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசுவார். அதன் பிறகு தொண்டர்கள் பலத்துடன் அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம். பெரியகுளத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் தொண்டர்கள் பலத்துடன் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டி வரும் நிலையில் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.