தமிழ்நாடு

அ.தி.மு.க. மாநாட்டுக்கு சிறப்பு ரெயில்- சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படுகிறது

Published On 2023-07-19 05:15 GMT   |   Update On 2023-07-19 05:15 GMT
  • 9 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 15 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில் பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.
  • 200 டிவிசனுக்கு உட்பட்ட 300 வட்டங்களில் இருந்து 500 வேன்கள் மற்றும் கார்கள் என மொத்தம் 1000 வாகனங்களில் பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

சென்னை:

அ.தி.மு.க.வில் தொண்டர்களின் செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பதை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் போட்டி மாநாடு நடத்துகின்றனர்.

ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு உள்ள தென் மாவட்டங்களை மையமாக வைத்து மதுரையில் பிரமாண்டமாக மாநாட்டை நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதே போல் ஓ.பன்னீர் செல்வம் கொங்கு மண்டலங்களை மையமாக வைத்து எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் எழுச்சி மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளார்.

பிரிந்து இருக்கின்ற அ.தி.மு.க. தொண்டர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாநாட்டை திருப்பு முனை மாநாட்டாக நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

மாநாடு நடக்க இன்னும் ஒரு மாதம் இருக்கின்ற நிலையில் இப்போதே அங்கு தங்குவதற்கு அறைகள், உணவு, பயணம் செய்ய வாகனங்கள் போன்றவற்றை முன்பதிவு செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் தொண்டர்களை மாநாட்டில் பங்கு பெற செய்து தன் பக்கம் தான் அ.தி.மு.க.வினர் இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்ட எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

அந்த வகையில் மதுரை மாநாட்டில் திரளாக பங்கேற்க சென்னை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் பல்வேறு கட்டமாக கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

9 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 15 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில் பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களை முன்பதிவு செய்து வருகின்றனர். 200 டிவிசனுக்கு உட்பட்ட 300 வட்டங்களில் இருந்து 500 வேன்கள் மற்றும் கார்கள் என மொத்தம் 1000 வாகனங்களில் பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

சென்னை மாவட்ட செயலாளர்கள் டி.ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், வி.என்.ரவி, தி.நகர் சத்யா, அசோக், கே.பி.கந்தன் ஆகியோர் தொண்டர்களை அழைத்து செல்ல சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட செயலாளர்கள் கூறும் போது, சென்னையில் இருந்து செல்லும் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு மண்டபம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு பந்தலில் 6 இடங்களில் 3 வேளையும் உணவு இடைவெளி இல்லாமல் வழங்கப்பட உள்ளது.

வட்டத்திற்கு 3 வேன் வீதம் தொண்டர்களை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர சிறப்ப ரெயில்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது. 3-ம் வகுப்பு ஏ.சி. படுக்கை வசதி ரெயில் ஒன்று பிரத்யேகமாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21 ஏ.சி. பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் 1500 பேர் பயணம் செய்யலாம்.

மேலும் 2 சிறப்பு ரெயில்கள் கேட்டு இருக்கிறோம். 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரெயில்கள் ஒதுக்க வேண்டும் என மத்திய ரெயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தி உள்ளோம்.

சிறப்பு ரெயில் 19-ந்தேதி இரவு 10 மணிக்கு மேல் புறப்பட்டு 20-ந் தேதி அதிகாலை மதுரை சென்றடையும். திருவிழா போல நடைபெறும் இந்த மாநாட்டில் அ.தி.மு.க. தொண்டர்கள் கடமை உணர்வுடன் கலந்து கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.

வட்டங்களில் இருந்து வேன்கள் ஒழுங்கு செய்து பயணம் செய்வதை போல ஏராளமான நிர்வாகிகள் தங்கள் சொந்த கார்களில் செல்லவும் தயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News