அ.தி.மு.க.வுடன் இணையும் எண்ணம் இல்லை- டி.டி.வி. தினகரன்
- அ.ம.மு.க தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துள்ளது. நாங்கள் எங்களது பாதையில் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம்.
- தமிழகத்தில் கடந்த 2019-ல் பா.ஜ.க.வுக்கு லேசான எதிர்ப்பு இருந்தது. ஆனால் தற்போது பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பே கிடையாது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூரில் இன்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
காவிரி நீர் விவாகரத்தில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி சிவகுமார் ஆகியோரிடம் சோனியா காந்தி மூலம் தமிழக முதலமைச்சர் பேசி தமிழகத்திற்கு உரிய, நடுவர் மன்ற தீர்ப்பின்படி தண்ணீர் பெற்று தர வேண்டும். ஏனென்றால் கர்நாடகாவில் ஆளுவது காங்கிரஸ் கட்சி தான். தொடர்ந்து கர்நாடகாவிற்கு அழுத்தம் கொடுத்து தண்ணீர் பெற்று தர வேண்டும். மாறாக டெல்லியில் போய் பேசுவதால் எந்த பயனும் இல்லை.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டோம். பல தொகுதிகளில் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. பணத்தை நம்பாமல் மக்களை நம்பி போட்டியிட்டோம்.
இதேபோல் வருகின்ற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. 13 சதவீதத்திற்கும் மேல் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது.
இரட்டை இலை சின்னம் இருந்தும் பல தொகுதிகளில் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு தலைமை சரியில்லாததே காரணமாகும். தாங்கள் தான் எல்லாம் என்ற நினைப்போடு அ.தி.மு.க.வில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய தொகுதியில் கூட அவர்களால் டெபாசிட் பெற முடியவில்லை.
எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து 10 தேர்தலில் அ.தி.மு.க தோல்வியை கண்டுள்ளது. சிலர் தங்களது தவறை உணர்ந்து திருந்தினால் தான் அ.தி.மு.க பலப்படும்.
உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து அ.தி.மு.கவின் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும்.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கம் சரியான தலைமை இல்லாததால் பலவீனம் அடைந்துள்ளது.
அ.ம.மு.க தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துள்ளது. நாங்கள் எங்களது பாதையில் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க.வுடன் இணையும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை.
தமிழகத்தில் கடந்த 2019-ல் பா.ஜ.க.வுக்கு லேசான எதிர்ப்பு இருந்தது. ஆனால் தற்போது பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பே கிடையாது. பெட்ரோலியத்தை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம் என மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி கூறி உள்ளதை பொறுத்திருந்து பார்ப்போம். மக்களுக்கு, நாட்டுக்கு எது நல்லதோ அதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.