தமிழ்நாடு

வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் திடீர் புகையால் பரபரப்பு- பயணிகள் அலறியடித்து இறங்கினர்

Published On 2023-08-28 14:29 IST   |   Update On 2023-08-28 14:29:00 IST
  • மின்சார ரெயில் வந்தபோது ஒரு பெட்டியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.
  • மின்சார ரெயில் மீண்டும் சென்ட்ரல் நோக்கி புறப்பட்டு சென்றது.

அம்பத்தூர்:

திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி இன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

காலை 7.15 மணியளவில் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் நடைபாதை அருகே மின்சார ரெயில் வந்தபோது ஒரு பெட்டியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.

இதற்குள் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் நின்றது. இதையடுத்து கரும்புகை வெளியேறிய ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் அலறியடித்து நடைமேடையில் இறங்கினர். இதனால் ரெயில் பெட்டியில் இருந்த வயதானவர்கள், பெண்கள், சிறுவர்கள் இறங்க முடியாமல் சிக்கி சிரமம் அடைந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கரும்புகை வந்த ரெயில் பெட்டியை பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து அந்த ரெயில் பெட்டி மட்டும் தனியாக கழற்றப்பட்டு ஆவடி பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . சுமார் ½மணி நேர தாமதத்துக்கு பின்னர் அந்த மின்சார ரெயில் மீண்டும் சென்ட்ரல் நோக்கி புறப்பட்டு சென்றது.

இதன்காரணமாக சென்னை மார்க்கமாக வந்த மின்சார ரெயில்கள் வரும்வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் மின்சார ரெயில்களில் இருந்து இறங்கி பஸ், ஆட்டோக்களில் பயணம் செய்தனர். சென்னை-திருவள்ளூர் மார்க்கத்தில் மின்சார ரெயில்சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதேபோல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை வழக்கம்போல் இருந்தது.

மின்சார ரெயில்பெட்டியில் கரும்புகை வெளியேறியதால் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இது குறித்து பெரம்பூர் ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, மின்சார ரெயில்கள் வேகமாக செல்லும் போது பிரேக் அழுத்தினால் இது போன்று கரும்புகை வெளிவரும். இது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த ரெயில் பெட்டியில் வழக்கத்திற்கு மாறாக கரும்புகை சற்று அதிகமாக வெளியேறியது. இதனால் பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

Tags:    

Similar News