தமிழ்நாடு

லோயர் கேம்ப் அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திடீர் ஆய்வு செய்து மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அரசு பள்ளிக்கு திடீர் விசிட்: ஆய்வு செய்து மாணவர்களிடம் விசாரணை நடத்திய அமைச்சர்

Published On 2023-10-25 05:36 GMT   |   Update On 2023-10-25 05:36 GMT
  • லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
  • மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என அமைச்சர் பார்வையிட்டார்.

கூடலூர்:

தேனி மாவட்டத்தில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தேனிக்கு வந்தார். முன்னதாக லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரத்தை கேட்டறிந்தார். நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு விட்டதா என கேட்டறிந்தார்.

மாணவர்களின் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தையும் கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு கல்வி ஆண்டில் மேலும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தையும் பார்வையிட்டு அங்கு தரமான உணவு, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா எனவும் பார்வையிட்டார். மாணவர்களையும் தனியாக வரவழைத்து அவர்களிடம் தரமான கல்வி அளிக்கப்படுகிறதா? வேறு ஏதேனும் குறைகள் உள்ளதா? என கேட்டறிந்தார். அமைச்சர் எவ்வித முன்னறிவிப்பின்றி அரசு பள்ளிக்குள் வந்து ஆய்வு மேற்கொண்டதுடன் மாணவர்களிடமும் விசாரணை நடத்தியது ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News