குற்றவாளிக்கு விரைந்து உரிய தண்டனை பெற்று தர நடவடிக்கை- அமைச்சர் கோவி. செழியன்
- பொள்ளாச்சி கூட்டு பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
- அரசின் செயல்பாடு, பல்கலைக்கழகங்கள், காவல்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் முத்தாண்டிபட்டி, ஆச்சாம்பட்டி, புதுக்குடி உள்ளிட்ட 30 இடங்களில் ரூ.6 கோடி மதிப்பில் புதிய அங்காடி கட்டிடங்கள், பள்ளிக்கட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்களை இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்தார் .
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23-ம் தேதி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து 25-ம் தேதி போலீஸ் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார். அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும், பெண் பிள்ளைகள், மாணவிகள் நலன் குறித்து குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி, நடைபெற்ற நிகழ்வு குறித்து உடனடியாக பாதுகாப்பு குழுவிடம் சொல்லி இருந்தால் இன்னும் துரித நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக இருந்திருக்கும். தனிப்பட்ட அச்ச உணர்வு, பெண்மைக்குரிய பாதுகாப்பு, மனநிலை இவைகளை மனதில் வைத்து இரண்டு தினங்கள் கழித்து கூறி இருந்தாலும் கூட குற்றவாளியை உடனே கைது செய்து இருக்கிறோம்.
குற்றவாளிக்கு விரைந்து தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கொண்டு மாணவி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை மனதில் வைத்து அரசியல் செய்ய முற்பட்ட கட்சி தலைவர்களுக்கு தரும் விளக்கம் என்னவென்றால், கடந்த காலங்களில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எல்லாம் மாநில அரசே துணை நின்ற சம்பவம் உண்டு.
பொள்ளாச்சி கூட்டு பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசிய போதெல்லாம் நிராகரித்தார்கள். ஆனால் தற்பொழுது அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் 3 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து இருக்கிறோம். கடந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க அச்சப்பட்டார்கள். அது ஆளுங்கட்சியின் அழுத்தம்.
ஆனால் தற்போது பாதிக்கப்பட்ட மாணவி புகார் இரண்டு நாள் கழித்து அளித்தாலும் சுதந்திர உணர்வோடு யாருடைய தங்கு தடை இன்றி நடவடிக்கை எடுத்திருப்பதை பாராட்ட மனமில்லாமல் இதை காரணம் காட்டி அரசை குறை சொல்லும் மனநிலை தான் உள்ளது.
அரசின் செயல்பாடு, பல்கலைக்கழகங்கள், காவல்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.
இருந்தாலும் மாணவிகளின் நலன் காக்க பெருந்துணை புரிவோம். மூன்று மாத காலம் அமைதியாக இருந்த தமிழகத்தில் மீண்டும் தனது குணத்தை காட்ட ஆரம்பித்து விட்டார் அண்ணாமலை. தி.மு.க. ஆட்சி செயல் சிறப்பாக செயல்பட்டு கொண்டுள்ளது. தோல்வி பயத்தில் அண்ணாமலை உளறி கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.