பாரூர் அருகே காட்டு யானைகள் மிதித்து வாலிபர் பலி
- இயற்கை உபாதை கழிக்க வந்தபோது 2 காட்டுயானைகள் சத்தம் போட்டது.
- காட்டுயானைகள் அகரம் அருகே உள்ள மறுதேரி ஏரியில் உள்ளது
மத்தூர்:
தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி வனப்பகுதியில் 2 காட்டுயானைகள் வெளியேறி கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள மோட்டுப்பட்டி அருகேயுள்ள மலை அடிவாரத்திற்கு இன்று காலை வந்தது.
அப்போது அந்த பகுதிக்கு பாரூர் அருகே உள்ள காட்டுகொலை கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் என்பவரது மகன் ராம்குமார் (வயது27) என்பவர் இயற்கை உபாதை கழிக்க வந்தபோது 2 காட்டுயானைகள் சத்தம் போட்டது.
அப்போது அந்த யானைகளுடன் தனது செல்போனில் செல்பி பிடித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த அந்த காட்டுயானைகள் ராம்குமாரை துரத்தியது. இதில் ஓட முடியாமல் அவர் தவறி விழுந்தார். அதனால் அந்த யானைகள் அவரை காலால் மிதித்து கொன்றது.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். யானைகள் தாக்கி இறந்த ராம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அந்த காட்டுயானைகள் அகரம் அருகே உள்ள மறுதேரி ஏரியில் உள்ளது. மேலும் வனத்துறையினர் அந்த காட்டுயானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.