தமிழ்நாடு

சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

வடமாநில இளம்பெண் கற்பழித்து கொலை: மர்மநபர்கள் வெறிச்செயல்

Published On 2023-09-25 13:48 IST   |   Update On 2023-09-25 13:48:00 IST
  • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • இளம்பெண்ணின் பெயர், ஊர் விவரம் தெரியவில்லை.

திருப்பூர்:

திருப்பூர் பெருமாநல்லூர் ராக்கியாப்பட்டி சுடுகாடு பகுதியில் இன்று காலை இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரை மர்மநபர்கள் கழுத்தை நெரித்தும், கட்டையால் அடித்தும் கொன்றதற்கான தடயங்கள் இருந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இளம்பெண்ணின் பெயர், ஊர் விவரம் தெரியவில்லை. அவர் யார் , எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை கொலை செய்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பார்ப்பதற்கு வடமாநில பெண் போல் உள்ளார். அவரை மர்மநபர்கள் கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News