தமிழ்நாடு
த.வெ.க. பொதுக்குழு கூட்டம்: மும்மொழிக் கொள்கை, டாஸ்மாக் ஊழலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்

த.வெ.க. பொதுக்குழு கூட்டம்: மும்மொழிக் கொள்கை, டாஸ்மாக் ஊழலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Published On 2025-03-28 11:51 IST   |   Update On 2025-03-28 11:51:00 IST
  • மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாத மாவட்டங்களில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
  • நிர்வாகிகள் தங்களின் செல்போன்களை மண்டபத்தின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை.

சென்னை:

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது.

தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக கட்சித் தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்கவிழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை முதலே பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் திருவான்மியூருக்கு வரத் தொடங்கினார்கள். காலை 7 மணிக்கெல்லாம் நிர்வாகிகள் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் குவிந்னர். அவர்கள் அனைவரும் தோளில் கட்சி நிற துண்டு அணிந்திருந்தனர்.

காலை 7.30 மணிக்கு நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை பரிசோதித்து உள்ளே அனுப்புவதற்காக 12 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 10 மாவட்டத்துக்கு ஒரு கவுண்டர் அமைக்கப்பட்டு இருந்தது.

ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் எந்த கவுண்டர் வழியாக உள்ளே செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு பலகை நுழைவு வாயிலிலேயே வைக்கப்பட்டு இருந்தது. நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கவுண்டர்கள் வழியாக உள்ளே சென்றனர்.

பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அனைவருக்கும் கியூ.ஆர். கோடுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. அந்த அடையாள அட்டை வைத்திருந்த நிர்வாகிகள் மட்டுமே பொதுக்குழு நடைபெறும் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று உள்ளே சென்றனர். கூட்டத் தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 2,500 பேர் பங்கேற்று உள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மாவட்ட செயலாளர், ஒரு பொருளாளர், ஒரு இணை செயலாளர், 2 துணை செயலாளர்கள், 10 பொதுக்குழு உறுப்பினர்கள், ஒரு பெண் பிரதிநிதி என மொத்தம் 16 பேர் வந்தனர்.



மாவட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாத மாவட்டங்களில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகள் தங்களின் செல்போன்களை மண்டபத்தின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. இதையடுத்து செல்போன்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு சென்றனர்.

பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்குள் ஆண்கள் மற்றும் பெண்கள் அமர தனி வரிசை ஒதுக்கப்பட்டு இருந்தது. மாவட்ட செயலாளர்களுக்கு தனி வரிசையும், மாநில நிர்வாகிகளுக்கு தனி வரிசையும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சித் தலைவர் விஜய் பனையூரில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு பொதுக்குழு நடைபெறும் மண்டபத்துக்கு வந்தார். அவர் பனையூரில் இருந்து திருவான்மியூருக்கு காரில் வந்தபோது வழிநெடுக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் திரண்டு நின்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

மேலும் மண்டப நுழைவு வாயிலில் விஜய்க்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கரகாட்டம், மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, செண்டை மேளம், நாதஸ்வரம் உள்ளிட்ட 82 கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் 2 குதிரைகளில் வீரர்கள் போல அமர்ந்திருந்த கட்சி தொண்டர்களும் வரவேற்பு அளித்தனர். மண்டபத்தின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 2 செயற்கை யானைகள் தும்பிக்கையை தூக்கியபடி விஜய்க்கு வரவேற்பு அளித்தது. பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தின் நுழைவு வாயில் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டிருந்தது.

காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.

மேடையின் நடுவில் கட்சித்தலைவர் விஜய் அமர்ந்திருந்தார். மேலும் மேடையில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் வெங்கட்ராமன், இணை செயலாளர் தாஹிரா, துணை செயலாளர் சி.டி. நிர்மல் குமார், தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், உறுப்பினர் சேர்க்கை பிரிவு செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

 


முதலில் கட்சியின் கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. அதன் பிறகு கட்சியின் கொள்கை தலைவர்கள் பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் உருவப்படத்துக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள். அதன் பிறகு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் தாமு என்கிற தாமோதரன் வரவேற்றார்.

பின்னர் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பேசினார்கள். அதன் பிறகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. இருமொழி கொள்கையே இருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ள நிலையில் இது பற்றி முறையாக விசாரித்து குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எனவே சட்டம்-ஒழுங்கில் தனி கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரந்தூர் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது. எனவே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும் என்பது உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News