தமிழ்நாடு

தமிழ்நாட்டுக்கு 2 புதிய அம்ரித் பாரத் ரெயில்கள்- மத்திய ரெயில்வே வாரியம் திட்டம்

Published On 2024-10-23 02:58 GMT   |   Update On 2024-10-23 02:58 GMT
  • அம்ரித் பாரத் ரெயில்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
  • இலகுரக ரெயில் பெட்டிகள் கொண்ட பாதுகாப்பு அம்சமும் இதில் இடம்பெற்று உள்ளது.

சென்னை:

இந்தியாவில் நீண்ட தூர பயணம் என்றாலே பயணிகளின் முதல் தேர்வாக ரெயில் பயணம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் குறைந்த செலவில் பல்வேறு வசதிகளுடன் நீண்ட தூரம் பயணம் செய்து கொள்வது தான். பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரெயில்வே துறையும் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் குளிர்சாதன வசதி இல்லாத முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொதுப்பெட்டிகளுடன் கூடிய அம்ரித் பாரத் ரெயில்கள் இந்தியாவில் உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. அம்ரித் பாரத் ரெயில்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் 26 அம்ரித் பாரத் ரெயில்களை கூடுதலாக இயக்க மத்திய ரெயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, நெல்லை - மேற்கு வங்க மாநிலம் சாலிமர் மற்றும் தாம்பரம் - மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சி இடையே புதிய அம்ரித் பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளது. நெல்லை - சாலிமர் வழித்தடத்தில் இயங்கும் ரெயில், நெல்லையில் இருந்து புறப்பட்டு விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் வழியாக செல்லும். அதேபோல, சென்னை தாம்பரம் - சந்திரகாச்சி வழித்தடத்தில் இயங்கும் ரெயில் ஆந்திர மாநிலம் நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் வழியாக செல்லும்.

அம்ரித் பாரத் ரெயில்கள் 12 முன்பதிவு மற்றும் 8 முன்பதிவில்லா பெட்டிகள் உள்பட, மொத்தம் 22 பெட்டிகளை கொண்டது. அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமரா, நவீன இருக்கை வசதி, டிஜிட்டல் திரை மற்றும் அடுத்த ரெயில் நிலையத்தை அறிவிக்கும் வசதி உள்ளது. இலகுரக ரெயில் பெட்டிகள் கொண்ட பாதுகாப்பு அம்சமும் இதில் இடம்பெற்று உள்ளது.

அம்ரித் பாரத் ரெயில் குறுகிய நேரத்தில் அதிக வேகத்தை எட்டும் திறனை கொண்டது. மேலும் இந்த ரெயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். புதிதாக வர இருக்கும் அம்ரித் பாரத் ரெயில்கள் மீது பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல்-ஜோலார்பேட்டை, சூலூர்பேட்டை ஆகிய 3 வழித்தடத்தில் உள்ள 16 ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.

எழும்பூர், மாம்பலம், கிண்டி, தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, அம்பத்தூர், திருவள்ளூர், திருத்தணி, சூலூர்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பல்வேறு பணிகள் நடக்கின்றன. இந்த பணிகள் 70 முதல் 90 சதவீதம் வரை நிறைவு பெற்றுள்ளன.

Tags:    

Similar News