ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் மிதந்து சண்முகசுந்தரம் யோகா செய்யும் காட்சி.
தாமிரபரணி ஆற்றில் மிதந்து விழிப்புணர்வு யோகா செய்த 72 வயது முதியவர்
- தண்ணீரில் மிதந்தபடி சூரிய நமஸ்காரம், ஜல யோகா மற்றும் பல்வேறு ஆசனங்களை சண்முக சுந்தரம் செய்தார்.
- தற்போது யோகா, சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை இலவசமாக கற்று கொடுத்து வருகிறேன்.
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்த 72 வயது முதியவரான சண்முகசுந்தரம் என்பவர் தலைமை ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற பின்னர், அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக யோகா, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்று கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தியும் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தியும் தாமிரபரணி ஆற்றில் மிதந்தபடி ஜல யோக சூரிய நமஸ்காரம் செய்து தாமிரபரணி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் சிறுவயது முதலே குழந்தைகள் தற்காப்பு கலைகளுடன் நீச்சலும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் மிதந்து யோகாசனம் செய்வதற்கான பயிற்சியை சண்முக சுந்தரம் தனது 72-வது வயதில் செய்து வருகிறார்.
தண்ணீரில் மிதந்தபடி சூரிய நமஸ்காரம், ஜல யோகா மற்றும் பல்வேறு ஆசனங்களை அவர் செய்தார். 72 வயதிலும் அவர் தண்ணீரில் மிதந்தப்படி யோகா செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சண்முக சுந்தரம் கூறுகையில், தற்போது யோகா, சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை இலவசமாக கற்று கொடுத்து வருகிறேன். தற்போதைய காலகட்டத்தில் நீச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முந்தைய காலங்களில் ஆற்றில் ஓடும் தண்ணீரில் குளித்து கொண்டு இருந்தோம். இப்போது குளியறையில் குளித்து வரும் நிலையில் குழந்தைகளுக்கு நீச்சலே தெரிவதில்லை. அந்த குழந்தைகள் மழை காலங்களில் தண்ணீர் இருக்கும் இடங்களுக்கு வரும் போது நீச்சல் தெரியாமல் கஷ்டப்படுகின்றனர்.
இந்த தவறு நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆற்றில் யோகா செய்தேன். குழந்தைகள் நீச்சல் கற்றுக் கொள்ளும்போது தன்னம்பிக்கை ஏற்படுகிறது. பள்ளிக்கூடங்களில் நீச்சல் பயிற்சிகள் எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.