ஆன்லைன் சூதாட்ட தடைக்கு புதிய சட்டம் இயற்ற வேண்டும்- ராமதாஸ்
- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து 15 மாதங்களாகின்றன.
- புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்திருக்கிறது. தி.மு.க. அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 26 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து 15 மாதங்களாகின்றன. ஆனால், இதுவரை தமிழகத்தின் மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வில்லை.
இனியும் எவரும் ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளாத வகையில், உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
உடனடியாக தடை பெறுவது சாத்தியமில்லை என்றால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வதற்காக புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.