தமிழ்நாடு

தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு சவால் விடும் வகையில் விஜய் கட்சியில் 3.5 லட்சம் புதிய நிர்வாகிகள்

Published On 2025-01-25 15:58 IST   |   Update On 2025-01-25 15:58:00 IST
  • கடந்த சில மாதங்களாக அவர் 234 தொகுதிகளுக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணியை செய்து வந்தார்.
  • தமிழகத்தில் இதுவரை எந்த கட்சியிலும் 100-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டது இல்லை.

சென்னை:

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளை தொடங்கி உள்ளார். கட்சி தொடங்கி ஓர் ஆண்டு நிறைவு பெற உள்ள நிலையில் 2026-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலை சந்திப்பதற்கு தயாராகவும் தொடங்கி இருக்கிறார்.

சமீபத்தில் சென்னை அருகே பரந்தூர் விமான நிலைய பிரச்சனை தொடர்பாக விவசாயிகளை சந்தித்து பேசிய அவர் தனது அரசியல் பயணம் புத்துணர்ச்சியுடன் தொடங்கி விட்டதாக அறிவித்தார்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற வகையில் பொறுப்பாளர்களை நியமனம் செய்ய நடிகர் விஜய் முடிவு செய்தார். இதற்காக கடந்த சில மாதங்களாக அவர் 234 தொகுதிகளுக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணியை செய்து வந்தார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி பணிகளை செய்வதற்கு என்று மாவட்ட செயலாளர் தலைமையில் வலுவான அணியையும் அவர் உருவாக்கி வருகிறார். ஒவ்வொரு மாவட்ட செயலாளர் தலைமையில் இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணை செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட கட்சிப் பணிகளை மேற்கொள்வார்கள்.

இந்த அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வாகி வருகிறார்கள். 120 மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஒன்றியம், நகரம் மற்றும் கிராம அளவில் கிளை அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு முடித்ததும் விஜய் கட்சியில் மாநிலம் முழுவதும் சுமார் 3.5 லட்சம் நிர்வாகிகள் களப்பணியாற்றுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.


234 சட்டசபை தொகுதிகளுக்கும் பணிகளை தீவிரப்படுத்த 120 மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். அதில் முதல் கட்டமாக நடிகர் விஜய் நேற்று தமிழக வெற்றிக்கழகத்துக்கு புதிதாக 19 மாவட்ட செயலாளர்களை அறிவித்தார்.

புதிய மாவட்ட செயலாளர்கள் விவரம்:-

அரியலூர் (அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதி)-எம்.சிவக்குமார், ராணிப்பேட்டை கிழக்கு (சோளிங்கர், அரக்கோணம்)-வி.காந்திராஜ், ராணிப்பேட்டை மேற்கு (ஆற்காடு, ராணிப்பேட்டை)-ஜி.மோகன்ராஜ், ஈரோடு கிழக்கு (அந்தியூர், பவானி, பெருந்துறை)-எம். வெங்கடேஷ், ஈரோடு மாநகரம் (ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி)-எம்.பாலாஜி, ஈரோடு மேற்கு (பவானி சாகர், கோபி செட்டிபாளையம்)-ஏ.பிரதீப்குமார், கடலூர் கிழக்கு (கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி)-பி.ராஜ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல கடலூர் தெற்கு (சிதம்பரம், காட்டுமன்னார்கோவில்)-எஸ்.சீனுவாசன், கடலூர் மேற்கு (திட்டக்குடி, விருத்தாசலம்)-எஸ்.விஜய், கடலூர் வடக்கு (நெய்வேலி, புவனகிரி)-கே.ஆனந்த், கரூர் கிழக்கு (குளித்தலை, கிருஷ்ணராயபுரம்)-ஜி.பாலசுப்பிரமணி, கரூர் மேற்கு (கரூர், அரவக்குறிச்சி)-வி.பி.மதியழகன், கள்ளக்குறிச்சி கிழக்கு (திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை)-ஆர்.பரணிபாலாஜி, கோவை தெற்கு (கிணத்துக்கடவு, வால்பாறை, பொள்ளாச்சி)-கே.விக்னேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கோவை மாநகரம் (கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம்)-வி.சம்பத்குமார், சேலம் மத்தியம் (சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு)-ஏ.பார்த்திபன், தஞ்சாவூர் தெற்கு (பட்டுக்கோட்டை, பேராவூரணி)-ஜி.மதன், தஞ்சாவூர் மத்தியம் (திருவையாறு, தஞ்சாவூர்)-ஆர்.விஜய் சரவணன், நாமக்கல் மேற்கு (பரமத்திவேலூர், நாமக்கல், குமாரபாளையம்)-என்.சதீஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அந்த மாவட்ட செயலாளர்களை தனித்தனியாக அழைத்து நடிகர் விஜய் பேசினார். அப்போது அவர் மாவட்ட செயலாளர்களிடம் கூறுகையில்,

• இத்தனை ஆண்டுகளாக என்னுடன் பயணித்தது மட்டுமின்றி உங்களது கடுமையான உழைப்பையும் கொடுத்து உள்ளீர்கள்.

• பல வருட உழைப்புக்காக இந்த பதவியை வழங்கி இருக்கிறேன்.

• எந்த விதத்திலும் தவறு நடக்காத வண்ணம் உங்கள் பணிகள் இருக்க வேண்டும்.

• மக்களின் தேவைகளை அறிந்து நேரடியாக மக்கள் பணிகளை செய்து கட்சிக்கு நல்ல பெயரை பெற்று தர வேண்டும்.

• அரசியல் பணியில் ஈடுபடும் போது ரொம்ப ஜாக்கிரதையாக இருந்து செயல்பட வேண்டும்.

• நீங்கள் செய்கின்ற பணிகள் மக்களுக்கும் எனக்கும் மகிழ்ச்சியை தர வேண்டும்.

• 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

• ஒவ்வொரு கிராமத்திலும் கிளை கழகத்தை தொடங்குங்கள்.

• பூத் கமிட்டியை வலுப்படுத்துங்கள் 

• தமிழக வெற்றிக் கழகம் உங்களைதான் முழுமையாக நம்பி உள்ளது.

• நானும் உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

• உங்கள் கடமைகளை தவறாமல் செய்வீர்கள் என்று நம்புகிறேன்" என்று சொல்லி முதுகில் தட்டிக் கொடுத்தார்.

நடிகர் விஜய்யின் இந்த அணுகுமுறை தமிழக வெற்றிக் கழக புதிய நிர்வாகிகளிடம் மிகுந்த மகிழ்ச்சியையும், சுறுசுறுப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை எந்த கட்சியிலும் 100-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டது இல்லை.

நடிகர் விஜய் முதல் முதலாக 120 மாவட்ட செயலாளர்களை நியமித்து கட்சி பணிகளை தீவிரப்படுத்துகிறார். இது 2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. அ.தி.மு.க.வுக்கு கடும் சவால்களை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று நம்புகிறார்கள்.

Tags:    

Similar News