'பெரியாரை இழிவுபடுத்துவோர் யாராக இருந்தாலும் ஈனப்பிறவிதான்'.. துரை வைகோ ஆவேசம்
- பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என்று கூறியவன் நான்
- தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சமூக நீதிக்கு அடித்தளம் இட்டவர் தந்தை பெரியார் தான்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. துரை வைகோவிடம் பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த துரை வைகோ, "பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என்று கூறியவன் நான். நான் இந்து பக்தன் தான். எல்லா கோவிலுக்கும் போவேன். அதேநேரத்தில் தந்தை பெரியார் இல்லாமல் சமூகநீதி கிடையாது. சமூக வளர்ச்சி கிடையாது. குறிப்பாக பெண்கள் படிக்கலாம், வேலை செல்லலாம் என்று சம உரிமை கொடுத்தது பெரியார் தான்.
நம்முடைய இளைஞர்களுக்கு ஆங்கிலப்புலமை இருப்பதற்கு இருமொழி கொள்கை தான் காரணம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சமூக நீதிக்கு அடித்தளம் இட்டவர் தந்தை பெரியார் தான். நமக்காக பாடுபட்ட பெரியாரை இழிவுபடுத்தும் யாராக இருந்தாலும் ஈனப்பிறவிதான்" என்று தெரிவித்தார்.