தமிழ்நாடு

அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகை

Published On 2025-02-28 10:24 IST   |   Update On 2025-02-28 10:24:00 IST
  • சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையங்கள் செயல்படுகிறது.
  • நிகழ்ச்சியில் வீரர்கள் அதிகாரிகள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள்.

சென்னை:

மத்திய மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் கோவை வந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும் வருகிற 5-ந்தேதி பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

அந்த கூட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழகத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்று உறுதிமொழியும் அளித்தார்.

இந்த நிலையில் அமித்ஷா மீண்டும் வருகிற 7-ந்தேதி தமிழகம் வருகிறார். ராணிப்பேட்டை அருகே தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இந்தியாவில் ஒடிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையங்கள் செயல்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 10-ந்தேதி தொழிற் பாதுகாப்பு படையின் உதய தின நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக இந்த நிகழ்ச்சி தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில்தான் கொண்டாடப்படும். ஆனால் இப்போது வெளி மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு ராணிப்பேட்டையில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் வீரர்கள் அதிகாரிகள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள்.

அன்றைய தினம் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகரிகளின் வீர சாகச நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். மறுநாள் (8-ந் தேதி) பயிற்சி நிறைவு அணி வகுப்பு நடக்கிறது.

Tags:    

Similar News