சீமான் வீட்டு காவலர்களுக்கு மார்ச் 13-ந்தேதி வரை நீதிமன்ற காவல்
- காவலாளி அமல்ராஜ் இடுப்பில் வைத்திருந்த லைசென்ஸ் பெற்ற கைத்துப்பாக்கியை போலீசார் கேட்டனர்.
- ஒரு கட்டத்தில் துப்பாக்கியை தலைக்கு மேல் தூக்கியதால் போலீசார் பதற்றம் அடைந்தனர்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குனராக பணியாற்றியபோது அவருக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது தன்னை சீமான் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டார் என்று விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சீமான் பற்றி சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். அவர் திடீரென்று சீமான் மீதான புகாரை கடந்த 2012-ம் ஆண்டு திரும்ப பெற்றார். இந்த நிலையில் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்வதற்கு வளசரவாக்கம் போலீசாருக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அவருடைய கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்தது. மேலும் இந்த வழக்கை விசாரித்து, 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வளசரவாக்கம் போலீசார் இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பெங்களூருவுக்கு சென்று நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி வழக்கு தொடர்பான புகைப்படங்கள், 'ஆடியோ' உரையாடல்கள் போன்ற தகவலை சேகரித்ததாக தெரிகிறது.
இதற்கிடையே சீமானிடம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீசார் கடந்த 24-ந்தேதி சம்மன் அனுப்பி இருந்தனர். அதில் 27-ந்தேதி (அதாவது நேற்று) பகல் 11 மணியளவில் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி இருந்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது சார்பில் வக்கீல்கள் ஆஜரானார்கள். சீமான் வெளியூர் சென்றிருப்பதால் அவர் ஆஜராகுவதற்கு 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் கடிதம் கொடுத்தனர்.
இதற்கிடையே சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் மீண்டும் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த சம்மன் நோட்டீசை வளசரவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கோபி நேற்று பகலில் ஒட்டி சென்றார்.
அந்த நோட்டீசில், 'நீங்கள் ஏற்கனவே அனுப்பிய சம்மன் பேரில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே இந்த சம்மனை ஏற்று 28-ந்தேதி (அதாவது இன்று) காலை 11 மணிக்கு நீங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் செய்தியாக ஒளிபரப்பானது. இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு வளசரவாக்கம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்மனை கிழித்த சீமான் வீட்டு பணியாளரை கைது செய்வதற்காக நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜேஷ் மற்றும் 2 போலீசார் நேற்று பிற்பகலில் சீமான் வீட்டுக்கு வந்தனர்.
அப்போது வீட்டின் வெளிக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜேஷ் கதவை தட்டினார்.
உடனே சீமான் வீட்டில் காவலாளியாக பணியாற்றி வரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தாம்பரத்தை சேர்ந்த அமல்ராஜ் கதவை திறந்து விட்டார். ஆனால் போலீசாரை வீட்டின் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆவேசம் அடைந்த இன்ஸ்பெக்டருக்கும், காவலாளிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
காவலாளி அமல்ராஜை இன்ஸ்பெக்டர் கைது செய்ய முயன்றார். அப்போது போலீசாருடன் மல்லுக்கட்டினார். சீமான் வீட்டின் வளாகத்துக்குள் போலீசாருக்கும், காவலாளிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இந்த களேபரத்தின் முடிவில் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரும் சேர்ந்து காவலாளி அமல்ராஜின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து போலீஸ் ஜீப்பில் ஏற்றுவதற்கு அழைத்து வந்தனர். ஆனால் காவலாளி அமல்ராஜ் போலீஸ் ஜீப்பில் ஏற மறுத்தார். இதனால் ஜீப்பில் வைத்தும் மோதல்-தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையில் காவலாளி அமல்ராஜ் இடுப்பில் வைத்திருந்த லைசென்ஸ் பெற்ற கைத்துப்பாக்கியை போலீசார் கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்து துப்பாக்கியை கையில் எடுத்து வைத்துக் கொண்டார். துப்பாக்கியை அவரிடம் இருந்து பறிப்பதில் கடும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் துப்பாக்கியை தலைக்கு மேல் தூக்கியதால் போலீசார் பதற்றம் அடைந்தனர்.
நீண்ட போராட்டத்துக்கு பின்னர் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு வழியாக கடும் போராட்டம் நடத்தி காவலாளி அமல்ராஜை கைது செய்து நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர், சீமான் வீட்டின் கதவில் ஒட்டப்பட்ட சம்மன் நோடீசை கிழித்ததாக அவரது வீட்டின் பணியாளர் சுபாகர் என்பவரையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் இந்த பரபரப்பு சம்பவம் நடைபெற்ற சமயத்தில் சீமான் வீட்டில் இல்லை. அவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
அவருடைய மனைவி கயல்விழி மட்டும் வீட்டில் இருந்தார். அவர் பதறியபடி வெளியே வந்தார். அவர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் முறையிட்டார்.
ஆனால் போலீசார் காவலாளியையும், பணியாளரையும் கைது செய்து அழைத்து சென்றனர்.
தனது வீட்டின் காவலாளியை போலீசார் கைது செய்து அழைத்து சென்றபோது, சீமானின் மனைவி கயல்விழி வெளியே வந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் நடந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்து இன்ஸ்பெக்டர் கோபத்துடன் காவலாளியை ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றார்.
சீமான் வீட்டில் நடந்த மோதல் சம்பவத்தில் காவலாளி தாக்கியதில் தங்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் மற்றும் 2 போலீஸ்காரர்கள், சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளியும், பணியாளரையும் சோழிங்கநல்லூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி கார்த்திகேயன் இருவரையும், வருகிற 13-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதனை அடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.