காவல் நிலையத்தில் ஆஜரான சீமான்.. வீரப்பன் மகள் கண்ணீருடன் பேட்டி
- சீமான் தனது வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜாரானார்.
- வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.
நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடபழனி விடுதியில் இருந்து தனது வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜாரானார். அவருடன் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வந்தனர்.
வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். காவல்நிலையம் முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
சீமானின் கார் செல்ல மட்டுமே போலீசார் அனுமதி வழங்கிய நிலையில், தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நா.த.க. தொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சீமானுடன் தன்னையும் காவல் நிலையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று வீரப்பன் மகள் வித்யா ராணி கண்ணீருடன் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "எங்கள் தலைவர் பிரச்சனையில் இருந்தால் கூட நிற்பது என்னுடைய கடமை. ஒரு பெண்ணின் விஷயத்தை வைத்து அரசியல் செய்கிறீர்கள். நாம் தமிழர் கட்சியை ஒழிக்க பார்க்கிறார்கள். நான் என்ன வெடிகுண்டா துப்பாக்கியா வைத்துள்ளேன், என்னை ஏன் தடுக்கிறீர்கள். இந்த உடம்பில் உயிர் உள்ளவரை மக்களுக்காக நிற்பான். வீரப்பன் மக்களுக்காக உண்மையாக இருந்தார்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.