மாவட்ட ஆட்சியரின் முட்டாள்தனமான பேச்சுக்கு திமுக தான் காரணம்- அண்ணாமலை
- மயிலாடுதுறை ஆட்சியர், அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார்.
- கனவுலகில் சஞ்சரிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், எப்போதுதான் இயல்பு நிலைக்கு வருவார்?
3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை நியாயப்படுத்தும் வகையில் பேசிய மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சீர்காழியில், மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர், அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார். அவருக்கு, பாஜக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெண்களும், பள்ளி மாணவிகளும், குழந்தைகளும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், முதலமைச்சரும், அமைச்சர்களும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்டு, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே, மாவட்ட ஆட்சியரின் இந்த முட்டாள்தனமான பேச்சுக்குக் காரணம்.
விளம்பர நாடகங்களை அரங்கேற்றி, தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கனவுலகில் சஞ்சரிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், எப்போதுதான் இயல்பு நிலைக்கு வருவார்?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.