மத்திய அரசின் வரி வருவாய்.. மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு வேண்டும் - தங்கம் தென்னரசு
- மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி பங்கின் அளவை 41 விழுக்காட்டில் இருந்து 40% ஆக குறைக்க மத்திய அரசு முடிவு
- இந்த முடிவால் மத்திய அரசுக்கு ரூ.35,000 கோடிக்கும் அதிகமாக கிடைக்கும்.
மத்திய அரசின் வரி வருவாய் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கின் அளவை இப்போதுள்ள 41 விழுக்காட்டில் இருந்து 40% ஆக குறைக்க வேண்டும் என்று 16-ஆம் நிதி ஆணையத்தைக் கேட்டுக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் இந்த முடிவால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு ரூ.35,000 கோடிக்கும் அதிகமாக குறையக்கூடும்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ""மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க நிதிக்குழு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகின்றன; நிதி ஒதுக்கீட்டை 41%லிருந்து 40%ஆக பரிந்துரைக்க முடிவெடுத்து இருப்பதை ஏற்க முடியாது.
50% நிதிப் பகிர்வு வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மீண்டும் வலியுறுத்துகிறது. பல மாநிலங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது" என்று தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய அரசின் வரி வருவாய் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கின் அளவை 50% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் ஏன்னு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.