தமிழ்நாடு

ஓடும் ரெயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்ட சம்பவம்- இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2025-02-28 17:09 IST   |   Update On 2025-02-28 17:09:00 IST
  • மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தப் பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்பட்டது.
  • மாவட்ட ஆட்சியர் சிவசவுந்தரவள்ளி உத்தரவின் பேரில் ஹேமராஜை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது.

திருப்பூர் மாவட்டம், கந்தம்பாளையத்தில் வசித்துவரும் ஆந்திர மாநிலம், சித்தூர், மங்கலசமுத்திரத்தைச் சேர்ந்த ஜெமினி ஜோசப்பின் மனைவி ரேவதி (வயது 36) என்ற 4 மாத கர்ப்பிணிப் பெண் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக கடந்த 6-ந்தேதி பிற்பகல் கோயம்புத்தூர் திருப்பதி விரைவு ரெயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணித்தபோது, ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் அப்பெட்டியில் ஏறிய கே.வி.குப்பம், பூஞ்சோலை கிராமம், சின்ன நாகல் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவன் அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்று அப்பெண்ணைத் தாக்கி, வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம், சீதாராமன் பேட்டை அருகில் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்தப் பெண் பலத்த காயம் அடைந்தார்.

அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தப் பெண்ணிற்கு கருச்சிதைவும் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில், ஹேமராஜ் மீது கொலை முயற்சி, பாலியல் தொல்லை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்நிலையில், வேலூரில் ஓடும் ரெயிலில் இருந்து கர்ப்பணி பெண்ணை தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில் ஹேமராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணியை தள்ளிவிட்ட சம்பவத்தில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் உள்ள ஹேமராஜ் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் சிவசவுந்தரவள்ளி உத்தரவின் பேரில் ஹேமராஜை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News