சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார் சீமான்
- வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
- வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகி விளக்கம் அளிக்க முடிவு.
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஆஜராகவில்லை.
இதையடுத்து, சீமான் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும், தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளதால் நாளை (இன்று) போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன். அடுத்த வாரம் ஆஜராவேன் என்று சீமான் நேற்று தெரிவித்து இருந்தார்.
சீமான் இன்று போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், இன்று மாலை 6 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகி விளக்கம் அளிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், போலீசாரின் அறிவிப்புபடி இரவு 8 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராக உள்ளதாக சீமான் தெரிவித்திருந்தார்.
சேலத்தில் இருந்து இன்று சென்னை வந்த சீமான் வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு மேல் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவதற்காக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் புறப்பட்டார்.
இதனால், வடபழனியில் காவல் நிலையத்திற்கு செல்லும் வழியிலேயே கார் தடுத்து நிறுத்தப்பட்டது. பிறகு, 9 மணியளவில் சீமான் மீண்டும் காவல் நிலையம் நோக்கி புறப்பட்டார்.
இந்நிலையில், நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பான வழக்கில் சீமான் விசாரணைக்கு ஆஜரானார்.