மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்- அமைச்சர்கள் சேகர்பாபு, செந்தில்பாலாஜி பங்கேற்பு
- கோவிலில் அமாவாசை நாளில் நடைபெறும் பூஜை விசேஷமானது.
- கும்பாபிஷேகத்தை காண இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலில் குவியத் தொடங்கினர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மன் சயனகோலத்தில் காட்சி அளிப்பதால் இங்கு வைக்கும் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
இந்த கோவிலில் அமாவாசை நாளில் நடைபெறும் பூஜை விசேஷமானது. இதனால் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து அம்மனை வழிபடுவார்கள். மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இத்தகைய சிறப்புமிக்க மாசாணியம்மன் கோவிலில் கடைசியாக கடந்த 2010 டிசம்பர் 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்து 14 ஆண்டுகள் ஆனதைத்தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கடந்த 6-ந் தேதி விக்னேஷ்வர பூஜையும் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
தொடர்ந்து பிரமாண்டமாக அமைக்கப்பட்ட யாகசாலை மண்டபத்தில் யாக பூஜைகளும் தொடங்கி நடந்து வந்தது. கோபுரம் மற்றும் விமானங்களில் பொருத்துவதற்காக 52 புதிய கும்பங்கள் தயார் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூஜைகள் நடந்தன.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. காலை 7.35 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், 8.45 மணிக்கு பூர்ணாகுதி பூஜையும் நடந்தது. தொடர்ந்து 9.15 மணிக்கு மாசாணியம்மன் கோவில் விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு கோவில் அர்ச்சகர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
கும்பாபிஷேகத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். கும்பாபிஷேகம் நடந்தபோது அம்மா தாயே மாசாணி என பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். பக்தர்கள் மீது டிரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தின் போது மழை தூறிக்கொண்டே இருந்தது. ஆனால் பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் கும்பாபிஷேகத்தை கண்டு ரசித்தனர்.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை காண இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலில் குவியத் தொடங்கினர். அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. கோவை, பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் இருந்து ஆனைமலைக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. 1100 போலீசார், 500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு கண்காணித்தனர். மருத்துவக்குழுவினர், தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.
ஆனைமலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் வசதிக்காக 14 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.