அண்ணா பல்கலை. வழக்கு: போராடி கைதான அனைவருக்கும் வாழ்த்துகள் - அன்புமணி ராமதாஸ்
- மாணவிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெறுகின்றன.
- பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையான போராட்டங்களை தினந்தோரும் முன்னெடுத்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும், தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கோரிக்கை வலுப்பெற்று போராட்டங்கள் நடைபெறுகின்றன.
அந்த வகையில், இந்த விவகாரம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று சென்னையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், போராட வந்த பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "அண்ணா பல்கலை. மாணவிக்கு நீதியும், தமிழக பெண்களுக்கு பாதுகாப்பும் கேட்டு போராடி கைதான அனைவருக்கும் வாழ்த்துகள்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வழங்க வலியுறுத்தியும், தமிழ்நாட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் இன்று போராட்டம் நடத்தி கைதான அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
போராட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மகளிர் சங்க நிர்வாகிகள், அனைத்து சார்பு மற்றும் இணை அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். குற்ற உணர்வில் தவிக்கும் அரசால் ஆயிரமாயிரம் அடக்குமுறைகள் ஏவி விடப்பட்டாலும் அவை அனைத்தையும் முறியடித்து மகளிருக்கு நீதியும், பாதுகாப்பும் பெற்றுத் தரும் வரை ஓயமாட்டோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.