தமிழ்நாடு

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பா.ஜ.க. பெண் நிர்வாகி கைது

Published On 2025-03-12 09:38 IST   |   Update On 2025-03-12 09:38:00 IST
  • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சிறப்பு படை அமைக்கப்பட்டு இருவரையும் தேடி வந்தனர்.
  • கடந்த 4 மாதமாக தேடி வந்த பா.ஜ.க. நிர்வாகி விஜயராணியை தனிப்படை அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்தனர்.

திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் பெஞ்சல் புயல் மழை மலட்டாறு வெள்ளப்பெருக்கு காரணமாக மலட்டாறு கரையோரமாக உள்ள திருவெண்ணைநல்லூர், அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளானது.

கடந்த 3.12.2024-ந்தேதி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்க வனத்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்ட அப்போதைய கலெக்டர் பழனி, முன்னாள் எம்.பி. பொன். கவுதம சிகாமணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சென்றனர். அப்போது பெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசூர் கூட்ரோடு பகுதியில் சாலை மறியல் செய்தனர். அவர்களை சந்தித்து ஆறுதல் கூற சென்றனர். செல்லும் வழியில் இருவேல்பட்டு கிராமத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு நிவாரண உதவிகள் செய்ய சென்ற போது அமைச்சர் மற்றும் அதிகாரிகளை ஆபாசமாக திட்டி சேற்றை வாரி வீசி மிரட்டல் விடுத்ததாகவும் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தனி பாதுகாப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் சேற்றை அள்ளி வீசிய இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராமர் என்கிற ராமகிருஷ்ணன், பா.ஜ.க. நிர்வாகி விஜயராணி (வயது 37) ஆகிய இருவர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சிறப்பு படை அமைக்கப்பட்டு இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 20-ந்தேதி ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 4 மாதமாக தேடி வந்த பா.ஜ.க. நிர்வாகி விஜயராணியை தனிப்படை அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்தனர். பின்னர் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். 

Tags:    

Similar News