மருத்துவக் கல்லூரி விடுதியில் 3 டாக்டர்கள் உயர் ரக கஞ்சாவுடன் கைது
- சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் அனுமதியோடு மாணவர்கள் விடுதியில் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
- போலீசார் 3 பயிற்சி டாக்டர்களை கைது செய்து விசாரித்தனர்.
சென்னை:
சென்னை போலீசில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரும், உள்ளூர் போலீசாரும் இணைந்து போதைப் பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், உளவுப்பிரிவு இணை கமிஷனர் தர்மராஜனின் நேரடி மேற்பார்வையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இந்த தனிப்படை போலீசாரும், கோட்டூர்புரம் போலீசாரும் இணைந்து உயர்ரக கிரீன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஆங்கிலோ இந்தியரான சைதாப்பேட்டை சின்னமலை பகுதியைச் சேர்ந்த ரோட்னி ரொட்ரிகோ (வயது 26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து1¼ கிலோ கிரீன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்களுக்கு கிரீன் கஞ்சா விற்றதும், அந்த மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் அனுமதியோடு மாணவர்கள் விடுதியில் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் பயிற்சி டாக்டர்கள் தருண், ஜெயந்த், சஞ்சய் ரத்தினவேல் ஆகிய 3 பேர் தங்கியிருந்த அறையில் இருந்து கஞ்சா, வலி நிவாரணத்துக்காகவும், போதைக்காகவும் பயன்படுத்தப்படும் 4 கேட்டமைன் போதைப்பொருள் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து போலீசார், 3 பயிற்சி டாக்டர்களையும் கைது செய்து விசாரித்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெறுகிறது. போதைப் பொருள் பயன்படுத்தியதாக பயிற்சி டாக்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம், மருத்துவத்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.