குடும்பக் கட்டுப்பாட்டை சரியாக செயல்படுத்தியதால் தண்டிக்கப்படுகிறோம்- உதயநிதி ஸ்டாலின்
- கலைஞர் இருக்கிற காலத்தில் இருந்தே எங்கள் வீட்டில் தொடர்ந்து காதல் திருமணம்.
- மணமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
சென்னை:
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மக்கள் முதல்வரின் மனித நேய விழா என்ற பெயரில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தினமும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
அந்த வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று 72 ஜோடி திருமணத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து 50 வகையான சீர்வரிசைகளை மணமக்களுக்கு வழங்கினார்.
இந்த விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு வரவேற்று பேசினார். மணமக்களை வாழ்த்தி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
சேகர்பாபுவுக்கு 2 முகங்கள் உண்டு. ஏனென்றால் அத்தனை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். எல்லா இடத்திலேயும் இருக்கிறீர்கள். எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக போட்டியாக இருக்கிறீர்கள். முழு நேர அரசியல்வாதி. அவர் நடத்துகிற நிகழ்ச்சிக்கு பக்கத்திலே யாருமே நிற்க முடியாது. யாருமே தெரிய மாட்டார்கள். இதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அது மேடையிலே இருக்கிற அத்தனை பேருக்கும் தெரியும். அவருக்கும் தெரியும். அமைச்சர் சேகர்பாபு ஆயிரக்கணக்கான திருமணங்களை செய்து வைத்து உள்ளார். 3 வருடத்தில் மட்டும் 1700 திருமணங்களை அவரது துறை சார்பாக நடத்தி வைத்துள்ளார். அந்த வகையில் இன்று 72 ஜோடி திருமணங்களை நடத்தி வைத்து உள்ளார்.
சீர்திருத்த முறையில், சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறோம். இதில் கலப்பு திருமணங்கள் மட்டுமின்றி, காதல் திருமணங்கள் இருக்கும் என நம்புகிறேன்.
இந்த காலத்தில் கலப்பு திருமணம் நடப்பது பெரிய விசயம். அதில் காதல் திருமணம் என்பது இன்னும்... எனக்கும் காதல் திருமணம்தான். ஆனால் எங்கள் வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை.
கலைஞர் இருக்கிற காலத்தில் இருந்தே எங்கள் வீட்டில் தொடர்ந்து காதல் திருமணம். கிட்டத்தட்ட இரண்டு தலைமுறையாக. எங்கள் வீட்டில் போய் யாராவது காதல் திருமணம் இல்லை, பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் என்றால் எங்கள் தாத்தா ஒரு மாதிரியாக பார்ப்பார். அந்த அளவுக்கு எங்கள் வீட்டில் காதல் திருமணம். பலருக்கும் பல அனுபவங்கள் இருக்கிறது.
நமது அரசு அமைந்த பிறகு முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான கையெழுத்துதான். விடியல் பயணம் திட்டம். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம். கிட்டத்தட்ட 4 வருடங்களில் மட்டும் 625 கோடி முறை பயணங்கள் மேற்கொண்டு உள்ளனர். இதுதான் இந்த திட்டத்தோட வெற்றி. ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ.800-ல் இருந்து 850 வரை சேமிக்கிறார்கள்.
நம் தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டம், செயல்படுத்த முடியாத திட்டம் இப்போது கிட்டத்தட்ட 25 மாதமாக செயல்படுத்தும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கிக் கொண்டு இருக்கிறோம். இப்படி பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செய்து கொண்டு இருக்கிறார்.
நம் தலைவர் 2019-ம் ஆண்டு முதல் சந்தித்த அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 11 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வெற்றியை தந்து உள்ளனர். மீண்டும் சட்டமன்ற தேர்தல் 2026-ல் வரப்போகுது. தலைவர் அதில் அத்தனை பேருக்கும் இலக்கு கொடுத்து உள்ளார். 243-ல் ஜெயித்து காட்ட வேண்டும் என்று சொல்லி உள்ளார். அது நீங்கள் இருக்கிற நம்பிக்கையில் தான்.
எனவே மணமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். நிறைய பெற்றுக் கொள்ளாதீர்கள். அதிலும் மத்திய அரசு பார்த்து கொண்டிருக்கிறது.
அதாவது ஒன்றிய அரசு குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி ஜனத்தொகை அதிகமாக இருக்கிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லியது. அதை வெற்றிகரமாக செய்து கொடுத்தது தமிழக அரசு. அதற்காக இப்போது நாம் தண்டிக்கப்படுகிறோம்.
இப்போது தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வரப் போகிறார்கள். இங்கு பாராளுமன்ற எம்.பி.க்கள் எண்ணிக்கை 39. இந்த மறுசீரமைப்பு வந்தால் 8 தொகுதி குறைந்து 31 தொகுதியாகி விடும்.
தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7 கோடி. ஆனால் குடும்பக் கட்டுப்பாட்டை சரியாக செய்யாத, சரியாக விழிப்புணர்வை ஏற்படுத்தாத வட மாநிலங்கள் இதனால் பயன் அடைய போகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.