சென்னையில் வைரஸ் காய்ச்சல் தாக்கம் 7 மாதங்களை கடந்த பிறகும் நீடிக்கிறது
- வைரஸ் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகள் தற்போது அதிகமாக காணப்படுகிறது.
- காய்ச்சல், இருமல் மற்றும் சளியுடன் பலர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிறார்கள்.
சென்னை:
சென்னையில் தற்போது வைரஸ் காய்ச்சல் தாக்கம் தொடர்ந்து காணப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு மழை தொடங்கியதால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவத் தொடங்கியது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்தே வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.
வழக்கமாக மழைக்காலம் முடிந்து பருவநிலை மாறிய பிறகு வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளும் குறைந்து விடும். ஆனால் இந்தமுறை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறையாமல் 7 மாதங்களை கடந்த பிறகும் நீடிக்கிறது. இதனால் சென்னையில் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:-
சென்னையில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக காய்ச்சல் மற்றும் சுவாச நோய் தொற்றுக்களுடன் நோயாளிகள் சிகிச்சை பெற வருகிறார்கள். வைரஸ் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகள் தற்போது அதிகமாக காணப்படுகிறது. அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்கள், பொழுது போக்கு நிகழ்ச்சியில் பொதுமக்கள் கூட்டமாக கூடுதல் ஆகிய காரணங்களாலும், வானிலை மாற்றம் காரணமாகவும் தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.
காய்ச்சல், இருமல் மற்றும் சளியுடன் பலர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிறார்கள். அவர்களுக்கு பரிசோதித்து பார்க்கும் போது 60 சதவீதம் பேருக்கு இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு காணப்படுகிறது.
பெரும்பாலான நோயாளிகளுக்கு இன்புளூயன்ஸா ஏ வைரஸ் மற்றும் குறிப்பாக அதன் துணை வைரஸ்களான எச்1 என்1, எச்3 என்2, ஆர்.எஸ்.வி. மற்றும் அடினோ வைரஸ் போன்ற வைரஸ்கள் கலவையாக காணப்படுகின்றன.
பெரும்பாலான மக்கள் ஒரு வாரத்திற்குள் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீண்டாலும், சிலருக்கு தொடர்ச்சியான இருமல் மற்றும் உடல்வலி ஏற்படுகிறது. இணை நோய்கள் உள்ள வயதான நோயாளிகளுக்கு பாதிப்புகள் அதிகரிக்கலாம்.
இருமல், தும்மல் அல்லது பேசும்போது சுவாச துளிகள் மூலம் இந்த வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. எனவே பொதுமக்கள் அதிக கூட்டமான பகுதிக்கு சென்றால் அவசியமாக முக கவசம் அணிவது நல்லது. இதன் மூலம் காய்ச்சல் பரவுவது தடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.