மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் மழை: பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் உயர்வு
- நம்பியாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 29 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு நீர்பிடிப்பு பகுதியில் 21 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
- செங்கோட்டை, தென்காசி, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 912 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணை பகுதியில் இன்று காலை வரை 28 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1 1/4 அடி உயர்ந்து 90.50 அடியாக உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டமும் 1 1/2 அடி உயர்ந்து இன்று 103.51 அடியாக உள்ளது. அங்கு 19 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 88.40 அடி நீர் இருப்பு உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 487 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
நம்பியாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 29 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு நீர்பிடிப்பு பகுதியில் 21 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக அகஸ்தியர் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. ஏற்கனவே களக்காடு தலையணையில் நீர்வரத்தால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்குறுங்குடி நம்பி கோவில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
செங்கோட்டை, தென்காசி, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் இரவு தொடங்கி இன்று வரை பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம் பகுதிகளில் அதிகபட்சமாக 6 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
வைப்பார், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், சூரங்குடி, வேடநத்தம், கயத்தாறு, கடம்பூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளிலும் தொடர்மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். மாநகரில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கிவிட்டதால் உரிமையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.