தமிழ்நாடு

VIDEO: மதுபோதையில் யானை மீது தூங்கிய பாகன்- வழக்கு பதிவு செய்து வனத்துறை நடவடிக்கை

Published On 2025-03-12 08:29 IST   |   Update On 2025-03-12 08:32:00 IST
  • ஏதோ விபரீதம் என தெரிந்த யானை சாலையின் ஓரமாக ஒதுங்கி அப்படியே நின்றது.
  • யானை உரிமையாளரும், வனத்துறை அலுவலரும் மதுபோதையில் யானையின் மீது படுத்து கிடந்த பாகனை கீழே இறக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான அனுபாமா என்ற பெண் யானை உள்ளது. இந்த யானையை நேற்று காலையில் பாகன் மேய்ச்சலுக்காக கொண்டு சென்றார். அருமனை அருகே அண்டுகோடு பகுதியில் யானையின் உரிமையாளர் மகள் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான இடத்தில் யானைக்கு தென்னை ஓலை மற்றும் அதற்கு தேவையான உணவுகளை கொடுத்து விட்டு மாலையில் பாகன் யானையை திரும்ப திற்பரப்புக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது பாகன் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் திடீரென அண்டுகோடு பகுதியில் வைத்து மதுபோதையில் இருந்த பாகன் யானை மீது படுத்து தூங்கினார். அப்போது பாகனுடைய கையில் இருந்த அங்குசம் கீழே விழுந்தது. அந்த அங்குசத்தை யானை எடுத்து பாகனிடம் கொடுத்தது. பாகன் வாங்காததால் அங்குசம் மீண்டும் கீழே விழுந்தது. இதனால் ஏதோ விபரீதம் என தெரிந்த யானை சாலையின் ஓரமாக ஒதுங்கி அப்படியே நின்றது.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இதுகுறித்து அப்பகுதியினர் அருமனை போலீசுக்கும், களியல் வனச்சரகத்துக்கும் தகவல் தொிவித்தனர். அதன்பேரில் போலீசாரும், வனச்சரக அலுவலர் அப்துல் காதர் முகைதீனும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் யானையின் உரிமையாளருக்கு தகவல் தொிவித்து அவரும் வரவழைக்கப்பட்டார்.

இதையடுத்து யானை உரிமையாளரும், வனத்துறை அலுவலரும் மதுபோதையில் யானையின் மீது படுத்து கிடந்த பாகனை கீழே இறக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவர் இறங்கவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து மது போதையில் இருந்து தெளிந்த பாகனை கீழே இறக்கினார்கள். இதையடுத்து வனத்துறையினரும், யானை உரிமையாளரும் யானையை வாகனத்தில் ஏற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் பாகனை விட்டுவிட்டு யானை வாகனத்தில் ஏற மறுத்து பிடிவாதம் பிடித்தது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து யானையை அண்டுகோடு பகுதியில் இருந்து அருமனை வழியாக திற்பரப்புக்கு நடத்தி கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் யானையும் பாகனும் முன்னே நடந்து செல்ல வனத்துறையினரும், உரிமையாளரும் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். ஒரு வழியாக யானையை திற்பரப்புக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இதுகுறித்து வனத்துறையினர் யானை உரிமையாளர் மற்றும் பாகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

Similar News