தமிழ்நாடு

பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு பதிலாக மாற்றுவழியில் பால் வழங்குவது சாத்தியமா?

Published On 2025-03-12 05:33 IST   |   Update On 2025-03-12 05:33:00 IST
  • ஒரு குளிர்சாதனப் பெட்டிகளில் 40 முதல் 50 பாக்கெட்டுகள் பால் வைக்க முடியும்.
  • ஆவின் நிறுவனம் வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை.

சென்னை:

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுக்க பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு பதிலாக மாற்றுவழியில் பால் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இதுதொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாய வழக்கு விசாரணையின்போது இந்த தகவலை ஆவின் நிறுவனம் பதிவு செய்து இருக்கிறது.

இந்த நிலையில் மாற்றுவழி என்பது கண்ணாடி பாட்டில் அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் பால் விற்பனை செய்யப்படுமா? அல்லது வேறு ஏதாவது முறையில் வழங்கப்படுமா? என்பதை ஆவின் நிறுவனம் வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை.

ஆனால் கண்ணாடி பாட்டில், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில் இவை இரண்டையும் மாற்றுவழியாக கொண்டாலும் கூட அது சாத்தியப்படாது என்பதுதான் பால் முகவர்கள், வியாபாரிகள் தரப்பு வாதமாக இருக்கிறது.

அப்படி இதை ஒரு மாற்றுவழியாக எடுத்துக்கொண்டாலும் கூட, நுகர்வோரின் பட்ஜெட்டில் இது பாதிப்பை ஏற்படுத்தும். முகவர்கள், வியாபாரிகளை எடுத்துக்கொண்டால், கண்ணாடி பாட்டில், பிளாஸ்டிக் பாட்டில் ஆகியவற்றை சரியாக பராமரித்து மீண்டும் பயன்படுத்தும் அளவுக்கு கொண்டு வருவது என்பது சிரமத்தை கொடுக்கும்.

 

அதேநேரம், ஒரு குளிர்சாதனப் பெட்டிகளில் 40 முதல் 50 பாக்கெட்டுகள் பால் வைக்க முடியும் என்றால், பாட்டிலில் கொண்டுவந்தால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு, குறைந்த எண்ணிக்கையில்தான் பால் வாங்கி வைப்பார்கள். இதனால் விற்பனையும் குறையும். தட்டுப்பாடும் ஏற்படும். அதேபோல், பால் நிறுவனங்கள் கண்ணாடி பாட்டில், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டிலை மீண்டும் சுத்தமாக பயன்பாட்டுக்கு கொண்டுவருமா? என்பதும் கேள்விக்குறிதான்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கை என்றாலும், இதுபோன்ற பல்வேறு சிக்கல்கள், சிரமங்கள் இருப்பதால் மாற்றுவழி வெற்றி பெறுமா? என்பது 100 சதவீதம் சந்தேகம்தான் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்தார்.

ஏற்கனவே ஆவின் நிறுவனம் தரப்பில் கொழுப்புச்சத்து செறிவூட்டப்பட்ட பால் 1½ லிட்டர் டப்பாவில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.120. இதுவே பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் இதே பாலின் விலை ரூ.90. டப்பாவில் அடைத்து விற்கப்படும் சமன்படுத்தப்பட்ட 1½ லிட்டர் பாலின் விலை ரூ.110. இதுவே பாக்கெட்டுகளில் ரூ.68-க்கு கிடைக்கிறது. நுகர்வோருக்கு பால் விலை அதிகரிக்கும் என்பதை சுட்டிக்காட்டும் ஒரு உதாரணமாக இது சொல்லப்படுகிறது.

மொத்தத்தில் ஆவின் நிறுவனம் இன்னும் 2 வாரத்தில் நிரந்தர தீர்வை அறிவித்து, அதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடைமுறைக்கு கொண்டு வந்தால் மக்களின் அன்றாட பட்ஜெட்டில் கூடுதல் செலவையே கொடுக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. மாற்றுவழி நடைமுறைக்கு வந்தால் தற்போதைய அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலையில் இருந்து குறைந்தது ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரிக்கும் என்றே பால் முகவர்கள், வியாபாரிகள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News