தேசிய கல்விக்கொள்கை: தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் பதில்
- தர்மேந்திரா பிரதான் அவர்களே, தவறான தகவல்களைப் பரப்புவது உண்மைகளை மாற்றாது.
- தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் மரபையும் சிதைக்க முயற்சிப்பவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்.
நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.
தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது.
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யு-டர்ன் போட்டது. கடந்தாண்டு மார்ச் 15இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டு சூப்பர் முதலமைச்சரின் ஆலோசனையில் அரசு பின்வாங்கியது. சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அவர்களே, தவறான தகவல்களைப் பரப்புவது உண்மைகளை மாற்றாது.
தமிழ்நாடு தொடர்ந்து தேசிய கல்விக்கொள்கை 2020 ஐ எதிர்த்து வருகிறது, ஏனெனில் அது நமது வெற்றிகரமான கல்வி மாதிரியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
எங்களது நிலைப்பாட்டில் எந்த திடீர் மாற்றமும் இல்லை. 15/3/2024 தேதியிட்ட கடிதம் தேசிய கல்விக்கொள்கையை அங்கீகரிப்பதாக கூறவில்லை.
மாணவர்களுக்கு நன்மை பயக்கும் போது மட்டுமே தமிழ்நாடு மத்திய திட்டங்களில் ஈடுபடுகிறது, ஆனால் அது எந்தவொரு திட்டத்தையும் அல்லது கட்டமைப்பையும் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்வதாக அர்த்தம் இல்லை. .
ஒரு குழு அமைக்கப்படும் என்றும், குழுவின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்படுத்துவது குறித்து நாங்கள் முடிவு செய்வோம் என்றும் அந்தக் கடிதம் தெளிவாகக் கூறுகிறது.
அது தேசிய கல்விக்கொள்கையை திணித்து தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் மரபையும் சிதைக்க முயற்சிப்பவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்.
தமிழ்நாட்டின் கல்வி மாதிரி முன்மாதிரியானது மற்றும் நமது மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் திறனை தொடர்ந்து நிரூபித்துள்ளது
இந்தியாவின் பலமான அதன் பன்முகத்தன்மை பலவீனமானது இல்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளவேண்டும் என்பதே நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது.
தமிழ்நாட்டின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அங்கீகரித்து ஆதரிப்பதன் மூலம், நீங்கள் உண்மையில் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் அதன் மாணவர்களுக்கும் ஒரு சிறந்த சேவையைச் செய்கிறீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.