ஸ்ரீவைகுண்டம் பள்ளி மாணவன் மீது தாக்குதல்: ஆட்சியர், எஸ்பி பதில் அளிக்க SC, ST ஆணையம் உத்தரவு
- பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் தேவேந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.
- படுகாயம் அடைந்த தேவேந்திரன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் தேவேந்திரன் (வயது 17) நேற்று பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக பஸ்சில் சென்றார்.
அப்போது பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் தேவேந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் படுகாயம் அடைந்த தேவேந்திரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, போலீசார் விசாரணை நடத்தி மாணவனை வெட்டியதாக கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் லெட்சுமணன் என்ற பெரியவன் (வயது 19) மற்றும் 2 இளஞ்சிறார்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஏப்ரல் 2ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.