சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை- நத்தக்கரையில் அதிகபட்சமாக 67 மி.மீ. மழை பதிவு
- சேலம் கந்தம்பட்டி பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மின் கம்பம் சாலையில் சாய்ந்தது.
- ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று காலை முதலே மேகங்கள் சூழ்ந்து கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவியது.
சேலம்:
சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை நெருங்கியதால் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்தநிலையில் சேலம் மாநகரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேகமூட்டமாக காட்சி அளித்தது. பிற்பகல் 2.30 மணியளவில் திடீரென சேலம் மாநகரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு வரை சாரல் மழையாக நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.
சேலம் கந்தம்பட்டி பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மின் கம்பம் சாலையில் சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து மின் கம்பத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இதேபோல சேலம் புறநகர் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், தம்மம்பட்டி , கரியகோவில், வீரகனூர், நத்தக்கரை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வயல்வெளிகளில் தண்ணீர் காடாக காட்சி அளித்தது.
கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், எடப்பாடி, சங்ககிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
தலைவாசல் பகுதியில் நேற்று மதியம் மழை பெய்த நிலையில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று காலை முதலே மேகங்கள் சூழ்ந்து கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவியது. மதியத்திற்கு மேல் மழை பெய்ததால் அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்குள்ள முக்கிய பகுதிகளை சுற்றி பார்த்தமுடன் குதூகலம் அடைந்தனர்.
5 அடி தூரத்தில் இருப்பவர்கள் கூட தெரியாததால் ஏற்காடு மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே ஊர்ந்து சென்றனர். மழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக நத்தக்கரையில் 67 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 9.8, ஏற்காடு 14.4, வாழப்பாடி 20, ஆனைமடுவு 22, ஆத்தூர் 36, கெங்கவல்லி 26, தம்மம்பட்டி 33, ஏத்தாப்பூர் 8, கரியகோவில் 47, வீரகனூர் 43, சங்ககிரி 13, எடப்பாடி 2, மேட்டூர் 5.4, ஓமலூர் 5.5, டேனீஸ்பேட்டை 10.5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 362.7 மி.மீ. மழை கொட்டியது.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரம், வெண்ணந்தூர், நாமகிரி பேட்டை, குமாரபாளையம், மங்களபுரம், புதுச்சத்திரம், சேந்தமங்கலம் திருச்செங்கோடு, கொல்லி மலை, பரமத்திவேலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக கொல்லிமலையில் 30 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. குமாரபாளையம் மற்றும் மங்களபுரத்தில் 22.6, மோகனூர் 2, நாமக்கல் 15, பரமத்திவேலூர் 4, புதுச்சத்திரம் 22, ராசிபுரம் 21.8, சேந்தமங்கலம் 18, கலெக்டர் அலுவலகம் 12.5, என மாவட்டம் முழுவதும் 191.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.