யோகா ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதன் பெயர்தான் திராவிட மாடலா? - சீமான்
- யோகா ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 20 மாத ஊதியத்தை வழங்க வேண்டும்
- யோகா ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என சீமான் கேள்வி
தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் யோகா ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 20 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்குணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "இந்திய ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், பணியாற்றி வந்த யோகா ஆசிரியர்களுக்கு ரூபாய் 5000 முதல் 8000 வரை அடிப்படை ஊதியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதுடன், கடந்த 20 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாதது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு முழுவதுமுள்ள 1300 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது பணியாற்றி வரும், பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற யோக ஆசிரியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக யோகா மற்றும் நேச்சுரோபதி ( BNYS) படித்துள்ள ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய தமிழக ஆயூஸ் மையம் (STATE AYUSH SOICIETY) கடந்த 07.02.2025 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது, ஏற்கனவே பணியாற்றி வரும் யோகா ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை நசிக்கின்ற கொடுஞ்செயலாகும். இப்புதிய பணி நியமனத்திற்கு, பல இலட்ச ரூபாய் லஞ்சம் பெற்று, கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்திய ஒன்றிய அரசின் விதிமுறைகளின்படி, ஆரம்ப சுகாதார நிலைய யோகா ஆசிரியர் பணியிடத்திற்கு, யோகா படிப்பில் பட்டம் அல்லது பட்டயம் அல்லது 12 ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதுமானது என்று வரையறுத்துள்ள நிலையில், அத்தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? யாரை மகிழ்விக்க இந்த அறிவிப்பு? யாருடைய லாபத்திற்காக இப்பணி நீக்க உத்தரவு? யோகா ஆசிரியர்களைப் பணி நீக்கம் செய்து, அவர்களது குடும்பத்தை வீதியில் நிறுத்துவது சிறிதும் நியாயமற்ற கொடுஞ்செயலாகும். இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? என்ற கேள்விகள் எழுகிறது.
ஆகவே, தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது பணியாற்றும் யோகா ஆசிரியர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்யும் முடிவைக் கைவிட்டு, அவர்களுக்கு வழங்க வேண்டிய 20 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.