4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
- அதிகபட்சமாக தஞ்சையில் 95 டிகிரி வெப்பம் பதிவானது.
- சென்னையில் நேற்று மிதமான மழை பெய்தது.
கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வெயிலுக்கு இதமாக தமிழ்நாட்டில் நேற்று அனேக இடங்களில் பரவலாக மழை பெய்தது. தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பொழிந்தது.
அதிலும் குறிப்பாக டெல்டா, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பதிவானது. இதுதவிர சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் 100 டிகிரியை தாண்டியும், பல இடங்களில் 100 டிகிரியை நெருங்கியும் வெப்பம் பதிவானது. நேற்று பெய்த மழையால் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. அதிகபட்சமாக தஞ்சையில் 95 டிகிரி வெப்பம் பதிவானது.
சென்னையில் நேற்று மிதமான மழை பெய்தது. காலையில் சூரியன் தென்பட்டாலும், சற்று நேரத்தில் மேகங்கள் கூடி மழை பெய்யத் தொடங்கியது. ஓரிரு இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவாலங்காட்டில் 2.4, சோழவரத்தில் 1.4, பூண்டியில் 1.5 செ,மீ. மழை பதிவாகி உள்ளது.