நெல்லை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை நடத்திய காட்சி.
நெல்லை ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் அதிரடி சோதனை
- நாளை குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- சென்னையில் இருந்து நெல்லை மாநகர காவல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நெல்லை:
நாளை (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்கள், முக்கிய சாலைகள் மற்றும் பஸ், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று முதல் குடியரசு தினம் வரை சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்திப்பு ரெயில் நிலையத்திலும் தண்டவாளங்கள், பார்சல் அலுவலகங்களில் போலீசார் சோதனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து சென்னையில் இருந்து நெல்லை மாநகர காவல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் கீதா, சந்திப்பு உதவி கமிஷனர் தர்ஷிகா ஆகியோர் மேற்பார்வையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ரெயில்வே போலீசாரும் அங்கு விரைந்து வந்து சோதனை செய்தனர்.
மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையிலான போலீசார் ரெயில் நிலைய காத்திருப்பு அறைகள், பார்சல் அறைகள், பார்சல்கள் உள்ளிட்டவற்றை மெட்டல் டிடெக்டர் மூலமாகவும், மோப்பநாய் மூலமாகவும் போலீசார் சோதனையிட்டனர். மேலும் ரெயிலுக்கு காத்திருந்த பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது.
குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் வண்ண வண்ண மின் விளக்குகளால் ரெயில் நிலையம் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சியளித்தது. இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து போலீசார் அதிக அளவில் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால், மிரட்டல் வந்த செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த செல்போன் எண் 'சுவிட்ச் ஆப்' என்று வந்துள்ளது.
இதையடுத்து மர்ம நபர்கள் மதுபோதையில் புரளியை கிளப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். எனினும் மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.