எல்லை விரிவாக்கம்: பொது மக்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு
- சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும் அரசாணை வெளியிடப்பட்டது.
- பொது மக்கள் 6 வாரங்களில் தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 13 நகராட்சிகளை உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 நகராட்சிகளை உருவாக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இதேபோல், திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 40 நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும் அரசாணை வெளியிடப்பட்டது.
16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, பொது மக்கள் 6 வாரங்களில் தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆட்சேபனைகள் அனைத்தும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி பரிசீலனை செய்யப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தலைமை செயலாகம், புனித ஜார்ஜ் கோட்டை என்ற முகவரி அனுப்பலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.