தமிழ்நாடு

மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்க அனுமதிப்பதா?- வைகோ கண்டனம்

Published On 2025-02-23 12:06 IST   |   Update On 2025-02-23 12:06:00 IST
  • தனியார் பள்ளிகள் தொடங்க அந்தந்த மாநிலத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
  • மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்க முயற்சிப்பதை முறியடிப்போம்.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நாடு முழுவதும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) கீழ் தனியார் பள்ளிகள் தொடங்க அந்தந்த மாநிலத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறப்பட வேண்டும். குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த சான்றிதழ் மாநில அரசிடம் இருந்து பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டே தனியார் பள்ளி தொடங்க சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

இந்த நிலையில், விதிமுறைகளில் திருத்தம் செய்து, ஒரு அறிவிப்பை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 2026-27 கல்வி ஆண்டு முதல் மாநிலங்களில் சி.பி.எஸ்.இ. பள்ளி தொடங்க வேண்டும் என்றால், அதற்கான தடையில்லா சான்றிதழ் மாநில அரசிடம் இருந்து பெற வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் மத்திய இடைநிலை கல்வி வாரியம், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலே சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்குவதற்கு நேரடியாக அனுமதி வழங்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். எனவே மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்க முயற்சிப்பதை முறியடிப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News