சி.ஐ.எஸ்.எப். 56-வது ஆண்டு விழா கொண்டாட்டம்- அமித் ஷா இன்று தமிழகம் வருகை
- ஐதராபாத்தில் தீயணைப்பு நிர்வாக கட்டிடம் ஆகிய பணிகளுக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.
- சி.ஐ.எஸ்.எப். வீரர்களின் கன்னியாகுமரி வரையிலான 6,553 கி.மீ. தொலைவிலான சைக்கிள் பேரணியை தொடங்கி வைக்கிறார்.
சென்னை:
நாட்டில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கும், 150-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கும் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 56-வது ஆண்டு விழா ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் அமைந்துள்ள இந்த படையின் மண்டல பயிற்சி மையத்தில் இன்று நடைபெறுகிறது.
விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். விழாவில் அவர், ஜம்மு-காஷ்மீரில் 32 அறைகள் அடங்கிய சி.ஐ.எஸ்.எப்-ன் முகாம் அலுவலகம், கொல்கத்தாவில் ஆயுதங்கள் வைப்பிடம், நொய்டாவில் 240 வீரர்களுக்கான குடியிருப்பு, சிவகங்கையில் உள்ள 4-வது பட்டாலியன் பிரிவில் 27 அதிகாரிகள் தங்கும் விடுதி மற்றும் 128 வீரர்களுக்கான குடியிருப்பு, ஐதராபாத்தில் தீயணைப்பு நிர்வாக கட்டிடம் ஆகிய பணிகளுக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் அவர், காணொலி வாயிலாக, குஜராத் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து சி.ஐ.எஸ்.எப். வீரர்களின் கன்னியாகுமரி வரையிலான 6,553 கி.மீ. தொலைவிலான சைக்கிள் பேரணியையும் தொடங்கி வைக்கிறார். இந்த தகவலை சி.ஐ.எஸ்.எப். இயக்குனர் ஜெனரல் ஆர்.எஸ்.பாட்டி சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.