தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காய் நகர்த்தும் முக்கிய தலைவர்கள்
- கட்சியை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி வருகிறோம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்து இருந்தார்.
- பதவியில் இருந்து செல்வப்பெருந்தகை நீக்கப்பட்டால் தனக்கு ஆதரவு அளிக்க அவர் கேட்டு கொண்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக கட்சியில் முக்கிய தலைவர்கள் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற வேண்டும் என்று தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் சந்தித்து 25 மாவட்டத் தலைவர்கள், 2 எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பதில் அளித்த செல்வப்பெருந்தகை, கட்சி விதிகளின்படி பதவிக்காலம் முடிந்த காலாவதியான தலைவர்கள் புகார் கூறுகிறார்கள். கட்சியை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி வருகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பெற கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கார்த்தி சிதம்பரம் தனது ஆதரவாளர்கள் மட்டுமல்லாது மறைந்த ஈ.வி.கே.எஸ். ஆதரவாளர்கள் மற்றும் திருநாவுக்கரசு ஆதரவாளர்களிடமும் ஆதரவு திரட்டி வருகிறார். பதவியில் இருந்து செல்வப்பெருந்தகை நீக்கப்பட்டால் தனக்கு ஆதரவு அளிக்க அவர் கேட்டு கொண்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ராகுல் காந்தி, பிரியங்காவிடம் நெருக்கமாக இருப்பதால் பதவியை பெற்று விட உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.