தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
- மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என தெரிவித்தார்.
- வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, மத்திய சென்னை தொகுதி கூட்டணி கட்சி தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரசாரம் செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என தெரிவித்தார்.
இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
உண்மைக்கு மாறாகவும் தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
எடப்பாடி பழனிசாமி மனு குறித்து தயாநிதி மாறன் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.